ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் பைனல்ஸ் ஜெர்மனியை நொறுக்கிய ஸ்பெயின்

தினகரன்  தினகரன்
ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் பைனல்ஸ் ஜெர்மனியை நொறுக்கிய ஸ்பெயின்

* 6-0 என அசத்தல் * டாரெஸ் ஹாட்ரிக்செவில்லா:  ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான நேஷன்ஸ் லீக் பைனல்ஸ் கால்பந்து தொடரின் ஏ4 பிரிவு லீக் போட்டியில்  ஸ்பெயின் அணி  6-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை அடித்து நொறுக்கியது. சுமார் 89 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி மோசமான  தோல்வியை ஜெர்மனி சந்தித்துள்ளது.ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் பைனல்ஸ் தொடர் 2வது ஆண்டாக  கடந்த செப். 3ம் தேதி தொடங்கியது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 55 நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. இந்நாடுகள் ஏ, பி, சி  பிரிவுகளில் தலா 16 நாடுகளும்,  டி பிரிவில் 7 நாடுகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் ஏ4 பிரிவில் உள்ள ஸ்பெயின்-ஜெர்மனி அணிகள் மோதிய லீக் போட்டி  ஸ்பெயினின் செவில்லா நகரில்  நேற்று நடந்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஸ்பெயின் வீரர்கள் அடிக்கடி ஜெர்மனியின் கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். பெரும்பான்மையான நேரம் பந்து ஸ்பெயின் வசமே இருந்தது.  ஸ்பெயின் வீரர்கள் 22 முறை கோலடிக்க செய்த முயற்சியில் 6 முறை பலன் தந்தது. முதல் பாதியில் 3 கோல்களும், 2வது பாதியில் 3 கோல்களும் அடித்து அசத்தினர்.பெரான் டாரெஸ்  33வது, 55வது மற்றும் 71வது நிமிடத்தில் கோல் போட்டு தனது முதல் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.  சக வீரர்கள் மோரடா 17வது நிமிடத்திலும்,  ஹெர்னாண்டஸ் ரோட்ரிகோ 38வது நிமிடத்திலும், மிகேல் ஒயர்ஸபால் 89வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆட்டம் முழுவதும் 2 முறை மட்டுமே கோலடிக்க ஜெர்மனி  செய்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. ஜெர்மனி கடந்த 89 ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான தோல்வியை சந்தித்தில்லை. பக்கத்து நாடான ஆஸ்திரியாவிடம் 1931ம் ஆண்டு நடந்த நட்புரீதியிலான போட்டியில் 0-6 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி தோற்று இருந்தது. சனிக்கிழமை சுவிட்சர்லாந்து அணியுடன் டிரா செய்த ஸ்பயெின்  அணி, வலுவான ஜெர்மனி அணியை நேற்று அடித்து நொறுக்கியது. இந்த மோசமான தோல்வி ஜெர்மனி கால்பந்து ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை