பெங்களூரு நீதிமன்றத்தில் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்; நிதி நிறுவனத்தை அடமானம் வைத்தார் சசிகலா: ஜனவரி 27ம் தேதி விடுதலை?

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெங்களூரு நீதிமன்றத்தில் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்; நிதி நிறுவனத்தை அடமானம் வைத்தார் சசிகலா: ஜனவரி 27ம் தேதி விடுதலை?

பெங்களூரு: வருமானவரித்துறை, அமலாக்கத்துறை கெடுபிடியால் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் சசிகலாவுக்கு விதித்த அபராத  தொகை ரூ. 10 கோடியே 10 லட்சத்தை சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தை அடமானம் வைத்து செலுத்தி உள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991  முதல் 1996ம் ஆண்டு வரை இருந்தபோது, ரூ. 66. 65 கோடி வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, 2வது  குற்றவாளியாக சசிகலா, 3வது குற்றவாளியாக வி. என். சுதாகரன், 4வது குற்றவாளியாக இளவரசி சேர்க்கப்பட்டனர். பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த விசாரணை முடிந்து 2014 செப்டம்பர் 27ம் தேதி  நீதிபதி ஜான் மைக்கல் டிகுன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் குற்றவாளியாக உறுதி செய்ததுடன் நான்கு பேருக்கும் தலா நான்காண்டுகள் சிறை தண்டனையும் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும் மற்ற மூன்று பேருக்கு தலா ரூ. 10 கோடியே 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.



தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து  குற்றவாளிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா உள்பட 4 பேரையும் குற்றவாளிகள்  இல்லை என கூறி நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார்.

இதை எதிர்த்து கர்நாடக மாநில அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம் 2017 பிப்ரவரி 14ம் தேதி வழங்கிய தீர்ப்பில் நான்கு பேரையும் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுடன் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி  செய்து உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி வழக்கில் 2வது குற்றவாளியான சசிகலா, 3வது குற்றவாளியான சுதாகரன், 4வது குற்றவாளியான இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 44 மாதங்களாக சிறையில் உள்ள குற்றவாளிகளின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிகிறது.



இதனிடையில் சசிகலா விடுதலை தொடர்பாக ஆர்டிஐ சட்டத்தில் சமூக ஆர்வலர் விண்ணப்பித்திருந்த கேள்விக்கு பதிலளித்திருந்த சிறை கண்காணிப்பாளர் 2021 ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். இதனிடையே சிறையில் தண்டனை அனுபவித்து வரும் மூன்று பேரும் நீதிமன்றம் விதித்திருந்த அபராத தொகையை செலுத்தாமல் இருந்தனர்.

அதில், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ. 10 கோடியே 10 லட்சம் அபராத தொகைக்கான வங்கி வரையோலை (டிடியை )பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் நேற்று மாலை வக்கீல் சி. முத்துகுமார் செலுத்தினார். அவருடன் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் உடனிருந்தார்.

சசிகலா தரப்பில் செலுத்திய அபராத தொகைக்கான வரையோலையை நீதிபதி பெற்று கொண்டார். இவ்வார இறுதி அல்லது அடுத்த வாரம் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கான அபராத தொகை செலுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில், சசிகலா ரூ. 10 கோடி அபராத தொகையை செலுத்தியது எப்படி என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர்.

சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் தொடர் சொத்துக்கள் முடக்கும் நடவடிக்கையில் வருமான வரித்துறை தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, கடந்த 2019ம் ஆண்டு சசிகலாவின் சுமார் ரூ. 1500 கோடி மதிப்புள்ள சொத்தும், கடந்த மாதம் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீடு உள்ளிட்ட ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்தும் முடக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 6ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியொருக்கு சொந்தமான ரூ. 2000 கோடி சொத்துக்கள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது. இதில், கொடநாடு எஸ்டேட் பழைய பங்களாவும் அடக்கம்.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை அடுத்தடுத்து முடக்கியதால் அவர்கள் செய்வதறியாமல் விழிபிதுங்கி நின்றனர். மேலும், முடக்கப்பட்ட சொத்துக்களுக்கான வருமானம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளையும் கேட்டனர்.

இதனால், சசிகலா தரப்பினர் தற்போது ரூ. 10 கோடி அபராதத்தை கையில் இருந்து கட்டினால் மேலும் சிக்கல் ஏற்பட்டு விடும் என கருதினர். வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் பிடியில் இருந்து தப்பிக்க சசிகலா தனது பெயரில் சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தை அடமானம் வைத்து அபராத தொகையை கட்டி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து அவரது வக்கீல்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

.

மூலக்கதை