பீகார் தேர்தலில் படு தோல்வி, உட்கட்சி பூசல்; காங். உயர்மட்டக்குழு அவசர ஆலோசனை..சோனியா தலைமையில் இன்று மாலை நடக்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீகார் தேர்தலில் படு தோல்வி, உட்கட்சி பூசல்; காங். உயர்மட்டக்குழு அவசர ஆலோசனை..சோனியா தலைமையில் இன்று மாலை நடக்கிறது

புதுடெல்லி: பீகார் தேர்தலில் படு தோல்வி, இடைத் தேர்தலிலும் தோல்வி, உட்கட்சி பூசல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் உயர்மட்டக்குழு இன்று மாலை அவசரமாக கூடி ஆலோசனை நடத்துகிறது. பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் மெகா கூட்டணி அமைத்த காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

அந்த மாநிலத்தில் ஆர். ஜெ. டி. கூட்டணி ஆட்சியைப் பிடிக்காமல் போனதற்கு காங்கிரசுக்கு 70 இடங்கள் கொடுத்ததுதான் காரணம் என்றும் கூறப்பட்டது.

அதேபோல், மத்தியப்பிரதேசம் இடைத்தேர்தலில் தோல்வி, 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற கர்நாடக இடைத்தேர்தலில் ஒரு இடங்களையும் கைப்பற்றவில்லை. மேலும், 8 தொகுதிகளுக்கு நடைபெற்ற குஜராத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் 1 இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.



உத்திரப்பிரதேசத்திலும் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தொடர் தோல்வி  அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தலைமையில் பெரும் மாற்றம் வேண்டும் என கடந்த ஆகஸ்டு மாதம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். தலைமைக்கு கடிதம் எழுதியவர்களில் மூத்த தலைவரான கபில் சிபலும் ஒருவர்.

அவர், பீகார் தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நேற்று அளித்த பேட்டியில், பாஜக-வுக்கு எதிராக வலுவான மாற்றுக்கட்சியாக மக்களால் காங்கிரஸ் பார்க்கப்படவில்லை. கட்சி பிரச்னைகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக தலைமைக்கு எழுதிய கடித்தை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.



உள்கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தொடர்பாக காங்கிரஸ் தலைமை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், எனது கருத்தை வெளிப்படுத்த வழி இல்லாதபோது அதை பொதுவெளியில் தெரிவிக்க நான் தள்ளப்படுகிறேன் என கூறினார்.

கபில் சிபல் கருத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள கெலாட், ‘நமது கட்சியின் உள்விவகாரங்களை கபில் சிபல் ஊடகங்களில் பேச வேண்டிய அவசியமில்லை.

இது நாடு முழுவதும் உள்ள நமது கட்சித்தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்தும்’என பதிவிட்டிருந்தார். அதேபோல், காங்கிரசின் சில தலைவர்கள் கபில் சிபலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால், காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு உட்கட்சி பூசலுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், பீகார் தேர்தல், இடைத்தேர்தல் தோல்விகள், மூத்த தலைவர்களின் கருத்துக்கள், உட்கட்சி பூசல் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று அவசரமாக கூடுகிறது.



அதில் தமிழகம் மற்றும் உ. பி. யில் அடுத் தாண்டு நடைபெறும் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட உள்ள இந்த உயர்மட்டக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நிரந்த தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ராகுல்காந்தி மீண்டும் தலைவராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் பீகார் மற்றும் பல மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தலில் அக்கட்சி தோல்வியை தழுவியுள்ளதால், ராகுல்காந்தி நியமனம் மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

இந்தநிலையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை