பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு; துணை முதல்வர் பதவிக்கு பாஜவில் கடும் போட்டி: அதிருப்தியில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு; துணை முதல்வர் பதவிக்கு பாஜவில் கடும் போட்டி: அதிருப்தியில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள்

பாட்னா: பீகார் மாநிலத்தின் முதல்வராக, தொடர்ந்து 4வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் இன்று மாலை பதவியேற்கிறார். அவருடன் பாஜவை சேர்ந்த 2 துணை முதல்வர்களும் பதவி ஏற்க உள்ளனர் என அக்கட்சியின் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் அப்பதவிகளை பிடிக்க பாஜவில் கடும் போட்டி நிலவுகிறது. 2 துணை முதல்வர் பதவியும், பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

நடந்து முடிந்த பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால் இக்கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை விட, பாஜ அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜ 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், பாட்னாவில் உள்ள நிதிஷ் குமார் இல்லத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏ. க்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.

இதில், நிதிஷ் குமார், பாஜ. வின் மேலிட பார்வையாளராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், இக்கூட்டணியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்மூலம், தொடர்ந்து 4வது முறையாக இம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்கும் வாய்ப்பை அவர் பெற்றார். பின்னர் ராஜ்பவன் சென்று ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ் குமார் சந்தித்தார்.

அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 4 கட்சிகளின் எம்எல்ஏ. க்களும் தனக்கு ஆதரவு அளிப்பதற்கான கடிதங்களை சமர்ப்பித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அவரை ஆட்சி அமைக்கும்படி அழைத்தார்.



ராஜ்பவனில் இருந்து வீடு திரும்பிய பிறகு தனது வீட்டுக்கு வெளியே நிதிஷ் அளித்த பேட்டியில், “திங்களன்று (இன்று) மாலை 4. 30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடைபெறும். பிறகு, சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது பற்றி முடிவு எடுக்கப்படும்,” என்றார்.

பதவியேற்பு விழாவில், நிதிஷ் குமாருடன் பாஜ. வை சேர்ந்த 2 பேர் துணை முதல்வராக பதவியேற்க உள்ளனர். இத்தகவலை நேற்று இரவு நிதிஷ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பாஜ தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.

மேலும் சபாநாயகர் பதவியும் பாஜவுக்கு என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுசில் குமார் மோடியை சேர்த்து மொத்தம் 30 அமைச்சர்கள் இருந்தனர்.

இதில், 18 பேர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள். 12 பேர் பாஜ. வை சேர்ந்தவர்கள்.

தற்போது, பாஜ 74 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அதற்கு அதிக அமைச்சர்கள் பதவி கிடைக்க உள்ளது.

கடந்த முறை 71 ஆக இருந்த ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ. க்கள் பலம், இம்முறை 43 ஆக குறைந்துள்ளது.

இதனால், இக்கட்சிக்கு குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்படும் என கருதப்படுகிறது. கடந்த ஆட்சியில் பாஜ மூத்த தலைவர் சுசில் குமார் மோடி துணை முதல்வராக இருந்தார்.

இம்முறை அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்றும், அவர் மத்திய இணை அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. நேற்று அவர் பாஜ. வின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படவில்லை.

கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக கதிஹர் தொகுதியில் இருந்து 4 முறை எம்எல்ஏ. வாக வெற்றி பெற்றுள்ள தர்கிஷோர் பிரசாத்தும், துணைத் தலைவராக பெட்டியா தொகுதி எம்எல்ஏ ரேணு தேவியும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இருவருமே தற்போது துணை முதல்வர் பதவிக்கான வாய்ப்புகளில் உள்ளனர்.

இருப்பினும் கடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியில் பாஜவை சேர்ந்த மேலும் 2 எம்எல்ஏக்கள் துணை முதல்வர் பதவியை பிடிக்க கடுமையாக போராடி வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் நிதிஷ் குமார், ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அப்போது, அவருடன் பாஜ. வின் மேலிட பார்வையாளராக பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுசில் குமார் மோடி உள்ளிட்டோர் செல்லவில்லை. ஆளுநரை சந்தித்து விட்டு நிதிஷ் சென்ற பிறகு, ராஜ்நாத் சிங்கும், சுசில் குமார் மோடியும் தனியாக சென்று ஆளுநரை சந்தித்து பேசினர்.

துணை முதல்வர் பதவி கிடைக்காததால் சுசில் குமார் மோடி அதிருப்தியில் உள்ளார் என்று தெரிகிறது.

கடைசி வரை தொண்டராக இருப்பேன் என்று அவர் ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 துணை முதல்வர்கள் என்ற நிலையில், நிதிஷ்குமாரால் முதல்வர் பதவியில் நிச்சயம் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால், ஐக்கிய ஜனதா தளத்திலும் அதிருப்தி நிலவுகிறது.

பாஜவுடன் ரகசிய கூட்டணி அமைத்துக் கொண்டு, பெரும்பாலான தொகுதிகளில் தங்கள் கட்சி தோல்வியடைய  காரணமாக இருந்த லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் மீது பாஜ நடவடிக்கை எடுக்கவில்லை என்று, ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பாஜவை சேர்ந்த 2 துணை முதல்வர்கள் பதவியேற்க உள்ளனர் என்ற செய்தி அவர்களை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

.

மூலக்கதை