இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி

துபாய்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை டி. 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி. 20 உலக கோப்பை நடைபெற இருந்தது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டித்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்தி முடித்தது.

இந்நிலையில் 7வது டி. 20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் அடுத்த ஆண்டும், 8வது தொடர் 2022ம்ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட உள்ளது.

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு உலக கோப்பை டி. 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

5 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் இந்தியாவில் டி. 20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பணியில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கான கவுன்டவுன் நேற்று துபாயில் நடந்தது.
இதில் கங்குலி, ஜெய்ஷா, ஐசிசி தலைமை செயல் அதிகாரி மனு சாவ்னி பங்கேற்றனர்.அப்போது பேசிய கங்குலி, இந்தியா போட்டியை நடத்துவது மிகவும் மரியாதைக்குரிய விஷயம், அங்கு விளையாடும் வாய்ப்பால் வீரர்கள் உற்சாகமாக இருப்பார்கள். ஐ. சி. சி நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நான் ஒரு வீரராக இருப்பதை அனுபவித்துள்ளேன்.

கிரிக்கெட்டின் ஒவ்வொரு ஆட்டத்தையும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பார்க்கிறார்கள் என்பதை அனுபவத்திலிருந்து அறிவேன். மதிப்பு மிக்க இந்த தொடரை வெற்றிகரமாக நடத்த முயற்சிப்பேன் என்றார்.


.

மூலக்கதை