5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி

துபாய்: கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பொறுப்பான பேட்டிங், ட்ரென்ட் போல்ட்டின் அசத்தலான பவுலிங் மற்றும் இளம் வீரர்களின் துடிப்பான அணுகுமுறை என எல்லாம் கை கொடுக்க பைனலில் எளிதாக டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் 5வது முறையாக மும்பை ஐபிஎல் கோப்பையை வென்று, புதிய சாதனையை படைத்துள்ளது.

‘இந்த தொடரில் எங்கள் அணியின் இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’என்று கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த நடப்பு ஐபிஎல் தொடர்,

மூன்று மாதங்கள் தாமதமாக செப்டம்பர் மாதம் துவங்கியது.

8 அணிகள் லீக் சுற்றுகளில் மோதின. பைனலுக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தகுதி பெற்றன.

துபாயில் நேற்று நடந்த பைனலில் டெல்லி அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்தது. முந்தைய போட்டியில் சிறப்பாக ஆடிய ஸ்டானிஸ், இப்போட்டியிலும் ஓபனராக ஆட வந்தார்.

ஆனால் போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஸ்டானிஸ் வெளியேறினார். தொடர்ந்து ரஹானே, தவான் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.

இதனால் 3. 3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் என பரிதாப நிலையை டெல்லி எட்டியது. 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும், கீப்பர் ரிஷப் பந்த்தும் பொறுப்பாக ஆடி, அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இருவருமே அரை சதம் அடித்தனர். ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்தார்.

பந்த் 56 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் டெல்லி 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்தது.

மும்பை பவுலர் போல்ட் 4 ஓவர்களில் 30 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 157 ரன்கள் என்ற வெற்றி இலக்கை மும்பை அணி, 18. 4 ஓவர்களில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஓபனராக ஆடிய கேப்டன் ரோஹித் ஷர்மா பொறுப்பாக நின்று ஆடி 68 ரன்களை எடுத்தார். இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று, மும்பை புதிய சாதனையை படைத்துள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக ட்ரென்ட் போல்ட் தேர்வானார்.

இத்தொடரின் தொடர் நாயகனாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சாதனை படைத்த மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘‘வெற்றியை தொடர்ந்து அடைவது என முதல் நாள், முதல் போட்டியில் இருந்தே நாங்கள் உறுதி எடுத்துக் கொண்டோம்.

இத்தொடரில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா என அணியின் இளம் வீரர்கள் அனைவருமே துடிப்பாக, திறமையாக ஆடினர். பொலார்ட் மற்றும் போல்ட்டின் அனுபவமும் கை கொடுத்தது.

குறிப்பாக பைனலில் போல்ட், தனது பவுலிங்கால் டெல்லி டாப்-ஆர்டர் பேட்டிங்கை தகர்த்து விட்டார். 5வது முறையாக கோப்பையை வென்றதில், அனைவருக்குமே நிறைவான மகிழ்ச்சிதான்’’என்று தெரிவித்தார்.

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், ‘‘முதன் முதலாக பைனலுக்கு தகுதி பெற்றதில் மகிழ்ச்சிதான்.

பைனலிலும் வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பரவாயில்லை. இதை ஒரு நல்ல அனுபவமாக எடுத்துக் கொள்கிறோம்.

இந்த சமயத்தில் எங்கள் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவரது அற்புதமான பயிற்சிதான், எங்கள் அணியை பைனலுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.

இப்போட்டியில் துவக்க ஆட்டக்காரர்கள் கை கொடுக்கவில்லை. அதனால் சவாலான இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.

மும்பை வலுவான அணி. 157 ரன்கள் என்ற இலக்கு, அந்த அணிக்கு போதாது.

180 அல்லது 190 ரன்கள் எடுத்திருந்தால், அந்த அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்க முடியும்’’என்று தெரிவித்தார்.

வளர்ந்து வரும் இளம் வீரர்
வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இளம் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் வென்றார். அவர் இந்த தொடரில் ஐந்து அரைசதம் அடித்து 473 ரன்கள் குவித்து இருந்தார்.

அவரது ஸ்ட்ரைக் ரேட் 124 ஆகும். மும்பை அணி பேர்பிளே விருதை வென்றது.


சூப்பர் ஸ்ட்ரைக்கர் : இந்த சீசனின் கேம் சேஞ்சர் விருதை கேஎல் ராகுல் வென்றார். சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதை கீரான் பொல்லார்டு வென்றார்.

அவர் இந்த சீசனில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 191. 42 ஆகும்.

இதுவே இந்த சீசனில் அதிகம்.

அதிக சிக்ஸ் அடித்த இஷான் கிஷன் : இந்த சீசனின் அதிக சிக்ஸ் அடித்த வீரருக்கான விருதை இஷான் கிஷன் வென்றார். அவர் 30 சிக்ஸ் அடித்து இருந்தார்.

பவர்பிளேயர் விருதை பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய ட்ரென்ட் போல்ட் வென்றார். அதிக ரன், அதிக விக்கெட் அதிக ரன் எடுத்த வீரராக கேஎல் ராகுல் ஆரஞ்ச் தொப்பியை வென்றார்.

அவர் 670 ரன்கள் குவித்து இருந்தார். அதிக விக்கெட் வீழ்த்திய டெல்லி அணியின் காகிசோ ரபாடா பர்ப்பிள் தொப்பியை வென்றார்.

அவர் 30 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.


.

மூலக்கதை