பீகாரில் நேற்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று அதிகாலை முடிவு: ஆட்சியை தக்க வைத்தது பாஜ கூட்டணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீகாரில் நேற்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று அதிகாலை முடிவு: ஆட்சியை தக்க வைத்தது பாஜ கூட்டணி

* 125 இடங்களுடன் பெரும்பான்மை பலம் பெற்றது என்டிஏ
* மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராக தேர்வு செய்யப்படுவாரா?

பாட்னா: பீகார் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி இன்று அதிகாலை முடிந்தது. அம்மாநிலத்தில் மீண்டும் பாஜக கூட்டணி 125 இடங்களுடன் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

அதனால், மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராக தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகார் மாநில சட்டப் பேரவை தேர்தல் கடந்த அக். 28 தொடங்கி நவ.

7ம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடது சாரிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணி ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது. ஆனால் காலை 10. 30 மணிக்கு மேல் நிலைமை மாறத் தொடங்கியது.

பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியது.

பீகாரில் பேரவை தேர்தல்களில் இதற்கு முன்னதாக வாக்கு எண்ணிக்கை 25 முதல் 26 சுற்றுகளாக எண்ணப்பட்டன. ஆனால் இம்முறை கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதலின் அடிப்படையில் 35 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ஆகையால், வாக்கு எண்ணிக்கை மாலை வரை நடைபெறும் என்று பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். ஆனால் இரு கூட்டணிக் கட்சிக்கும் வாக்கு எண்ணிக்கையில் மிகச் சிறிய இடைவெளியே இருந்ததால் இழுபறி நீடித்தது.

முதல்வர் நிதிஷ்குமார் தரப்பில் தேர்தல் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், இறுதிகட்ட வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாகவும் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன. வெற்றி பெற்றுவிட்டதாக அதிகாரிகள் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு,

பின்னர் தோல்வி அடைந்துவிட்டதாக கூறி சான்றிதழ்களை வழங்க மறுப்பதாக அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெற்றி அறிவிப்பு வெளியிட்ட பின்னர், தோல்வி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கிடையே நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை சென்ற நிலையில் 243 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாலை 4 மணியளவில் வெளியிட்டது.

இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் (பாஜக - 74, ஜேடியு - 43, விஐபி - 4, ஹெச்ஏஎம் - 4) வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாபந்தன் கூட்டணி 110 தொகுதிகளில் (ஆர்ஜேடி - 75, காங்கிரஸ் - 19, இடதுசாரிகள் - 16) வெற்றி பெற்றுள்ளன.

ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் - 5, சிராக்கின் லோக் ஜனசக்தி - 1, மாயாவதியின் பிஎஸ்பி - 1, சுயேட்சை - 1 என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால், பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இருந்தும் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால், மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

பாஜக 74 இடங்களை கைப்பற்றியதால், அக்கட்சி தலைமையில் முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக இன்று தேசிய ஜனநாயக கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடிபணிய மாட்டோம்
தேர்தல் ஆணையத்திடம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அளித்த புகாரில், ‘பீகார் சட்டப் பேரவை தேர்தலில் 119 இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில், அவர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது’ என்று குற்றம் சாட்டியது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த தேர்தல் ஆணையம், ‘யாருடைய நிர்பந்தத்திற்கும் அடிபணியமாட்டோம்.

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக தபால் வாக்குகளை மீண்டும் சரிபார்த்து செல்லாத வாக்குகள் இருந்தால் அவை நிராகரிக்கப்பட்ட பிறகே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது’ என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

.

மூலக்கதை