நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது.

இவ்வாறு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்றுமாசு காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை விதிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் டெல்லி, அரியானா மற்றும் உத்தரபிரதேசத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஏற்கனவே பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்துள்ளன.



இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், ஆந்திரா, அசாம், பீகார், சட்டீஸ்கர், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, தமிழ்நாடு உள்ளிட்ட 23 மாநிலங்களில் உள்ள 122 நகரங்களில் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ. கே. கோயல் தலைமையிலான அமர்வு கடந்த புதன்கிழமை விசாரித்தது.

அப்போது பிறப்பித்த உத்தரவில், பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்கள் தடைவிதித்துள்ளன. காற்று மாசு அதிகமுள்ள நகரங்களை கொண்ட மாநிலங்களிலும், பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது.

எனவே, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை விதித்துள்ளதால், நோட்டீஸ் அனுப்ப தேவையில்லை.

அதே நேரம், காற்றின் தரம் குறைந்த மாநிலங்களில் நவ.

7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து காற்று மாசு நிலவும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, அசாம், பீகார், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதற்கிடையே, பட்டாசு வெடிக்கத் தடை கோரும் விவகாரம் தொடர்பான மனுக்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தாக்கல் செய்த நிலையில், வழக்கில் நீதிபதி ஏ. கே.

கோயல் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது.

இன்று நள்ளிரவு முதல் வரும் 30ம் தேதி வரை இந்த தடை நீடிக்கும். அதன்பின் டெல்லியின் மாசு தன்மை அடிப்படையில் தளர்வுகள் இருக்கும்.



நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மாசு தரக்குறியீடு அடிப்படையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, சுமாரான காற்று மாசு உள்ள நகரங்களில் பசுமை பட்டாசு வெடிக்கலாம்.

அதுவும், உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்படி குறிப்பிட்ட 2 மணி நேரங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும். காற்றின் மாசு தரக்குறியீட்டின் பட்டியலில் பாதிப்பு மற்றும் மிகவும் பாதிப்பு உள்ள நகரங்களில் பசுமை பட்டாசு கூட வெடிக்கக் கூடாது.

தமிழகத்தில் தூத்துக்குடி, திருச்சி போன்ற நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அடிப்படையில் பசுமை பட்டாசு அனுமதிக்கப்படும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பட்டாசு தொழில் பாதிக்கும்!
தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. இதனால், தமிழகத்திலுள்ள பட்டாசு தொழிலை கடுமையாக பாதிப்பதுடன் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வேலைவாய்ப்புகளை பறித்திடும் ஆபத்து உருவாக்கியுள்ளது.

உச்சநீதிமன்றம் ஏற்கனவே பட்டாசு தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் அதுதொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்புப் பிரச்னைகளையும் ஆய்வு செய்தபின் பட்டாசு வெடிப்பதை அனுமதித்துள்ளது. அதாவது, தீபாவளி நாளில் இரண்டு மணி நேரத்தில் பட்டாசுகள் வெடிக்கலாம் என்ற நேர அளவையும் விதித்து உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.



பட்டாசு மற்றும் வெடிகள் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள வழிகாட்டுதல்படியே தயாரிக்கப்படுகின்றன. பட்டாசுகள் தயாரிப்பு முறை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது.

இருந்தும், கொரோனா பரவல் காரணத்தை காட்டி, தற்போது முக்கிய நகரங்களில் பட்டாசு ெவடிக்க தடை விதிப்பால் அந்த தொழிலில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

.

மூலக்கதை