மெஜாரிட்டிக்கு இன்னும் 6 எலக்டோரல் வாக்குகள் தேவை: அமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மெஜாரிட்டிக்கு இன்னும் 6 எலக்டோரல் வாக்குகள் தேவை: அமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன்

*  உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு
* வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முயற்சி

நியூயார்க்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் இன்று காலை நிலவரப்படி அதிபர் பதவிக்கான ரேசில், ஜோ பிடன் 264 எலக்டோரல் வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். 214 எலக்டோரல் வாக்குகளுடன் பின்தங்கியுள்ள தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘வெற்றி நமதே.

டிரம்ப்பின் சதிகளை முறியடிப்போம்’என்று தனது ஆதரவாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஜோ பிடனும் அறைகூவல் விடுத்துள்ளார். ‘உலகின் சக்திவாய்ந்த பதவி’என கருதப்படும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் (3ம் தேதி) நடந்தது. அதற்கு முன்னதாகவே அமெரிக்கா வாக்காளர்களில் 10 கோடி பேர் தபால் மற்றும் இணையதளம் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

நேரடி தேர்தலில் 6 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதனால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.

சுமார் 67 சதவீத வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

கடந்த 2016ல் நடந்த அதிபர் பதவிக்கான தேர்தலில் 59,2 சதவீத வாக்குகளே பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்த கையோடு, வாக்கு எண்ணிக்கை துவங்கி விட்டது. துவக்கத்தில் இருந்தே ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிடன், குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விட, குறைந்த வாக்கு சதவீத வித்தியாசத்தில் முன்னிலையிலேயே இருந்தார்.

50 மாகாணங்களில் இருந்து பெறப்படும் வெற்றிகளின் அடிப்படையில் எலக்டோரல் வாக்குகள் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே அமெரிக்க அதிபரை தேர்வு செய்யும் முறை உள்ளது. 29 எலக்டோரல் வாக்குகள் உள்ள தலைநகர் மாகாணமான நியூயார்க்கில் 75 சதவீத வாக்குகளை பெற்று, ஜோ பிடென், டிரம்ப்பை பின்னுக்கு தள்ளிய செய்தி, அவரது ஆதரவாளர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

தொடர்ந்து கலிபோர்னியா, நியூ ஜெர்சி, வெர்ஜீனியா, வாஷிங்டன், அரிசோனா, மினசோட்டா, கொலராடோ, கொலம்பியா என அடுத்தடுத்து எலக்டோரல் வாக்குகளை, ஜோ பிடன் அள்ளினார்.
இருப்பினும் குறைந்த வித்தியாசத்திலேயே டொனால்ட் டிரம்ப்பும் துரத்தி வந்தார்.

டெக்சாஸ், புளோரிடா மற்றும் ஒஹியோ மாகாணங்களில் அவரது கட்சி பெற்ற வெற்றி, அவருக்கும் கணிசமான எலக்டோரல் வாக்குகளை பெற்றுத் தந்தது.

அதிபர் பதவிக்கான தேர்தலில் பெரும்பான்மைக்கு 270 எலக்டோரல் வாக்குகள் தேவை என்ற நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணியளவில் பிடென் 238 வாக்குகளும், டிரம்ப் 213 வாக்குகளும் பெற்றிருந்தனர். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

இன்று காலை சிறிய மாகாணங்களில் பிடனின் ஜனநாயக கட்சிக்கு அடுத்தடுத்து வெற்றிகள் கிடைக்க, இன்று காலை 10 மணி நிலவரப்படி ஜோ பிடென் 264 எலக்டோரல் வாக்குகள் பெற்றுள்ளார். விஸ்கான்சின் மற்றும் மிச்சிகென் மாகாணங்களில் கடைசி நேரத்தில் பெற்ற வெற்றியால் ஜோ பிடனுக்கு இந்த முன்னிலை ஏற்பட்டுள்ளது.

26 எலக்டோரல் வாக்குகள் கொண்ட இந்த 2 மாகாணங்களில் ஏற்பட்டுள்ள தோல்வி, டிரம்ப்பை முற்றிலும் நிலைகுலைய செய்து விட்டது.

தபால் வாக்கிலும் முந்தும் பிடன்
பெரும்பான்மைக்கு இன்னும் 6 எலக்டோரல் வாக்குகளே தேவை என்ற நிலையில், ‘வெற்றி நமதே’ என்று பிடன் உறுதியாக தெரிவித்துள்ளார். ஆனால் 10 கோடி தபால் வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது.

அதிலும் பிடன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதனால் டிரம்ப்புக்கு உதறல் ஏற்பட்டு விட்டது. ‘நமக்கெதிராக பெரிய சதி நடக்கிறது.

வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்கவில்லை என்பதுதான் உண்மை. நான் உச்ச நீதிமன்றம் சென்று நியாயத்தை, நமக்கான வெற்றியை பெறுவேன்’ என்று கூறிக் கொண்டே, மற்றொரு புறம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப், கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக அவரது சார்பில் வழக்கும் தொடரப்பட்டு விட்டது. ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று முதல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

‘தற்போதைய அதிபரால் அமெரிக்க ஜனநாயகம் கடும் அபாயத்தில் உள்ளது.

அவர் கோர்ட்டுக்கு சென்றுள்ளார். அதையும் எதிர்கொள்வோம்.

இறுதி வெற்றி எப்படியும் நமக்கே’ என்று ஜோ பிடன் அறைகூவல் விடுத்திருக்கிறார். இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் மாறி மாறி பேரணிகளில் இறங்கி விட்டனர்.

நேற்று இரவு 7 மணியளவில் நியூயார்க்கில், பிடனின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். ‘தபால் வாக்குகள் வெளிப்படையாக எண்ணப்பட வேண்டும்.

ஒவ்வொரு வாக்கும் நேர்மையானதாக இருக்க வேண்டும். இதில் நாங்கள் கவனத்துடன் உள்ளோம்.

ஏதாவது முறைகேடு நடந்தால், பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்’ என்று வெளிப்படையாகவே முழக்கமிட்டனர். மற்றொருபுறம் டெட்ராய்டில் திரண்ட டிரம்ப்பின் ஆதரவாளர்களின் முழக்கம், வெளிப்படையாகவே வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது. நெவாடா, வாஷிங்டன், கலிபோர்னியா உள்ளிட்ட பல நகரங்களில் இதே நிலை நீடிப்பதால், நாட்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எந்நேரமும் கலவரங்கள் வெடிக்கலாம் என்பதால் போலீசார் உச்சகட்ட டென்ஷனில் உள்ளனர்.

செனட்டிலும் வலுவான நிலையில் பிடன்
செனட்டுக்கு 50 மாகாணங்களில் ஒரு மாகாணத்திற்கு 2 பேர் வீதம் 100 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது தவிர வெற்றியின் அடிப்படையில் மாகாணத்திற்கு செனட் பிரதிநிதிகள் 435 பேர் தேர்வு செய்யப்படுவர்.

மொத்தமுள்ள இந்த 535 உறுப்பினர்களை கொண்டே அமெரிக்காவில் புதிய சட்டங்களை இயற்ற முடியும். தற்போது ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தலா 48 செனட் உறுப்பினர்களை பெற்றுள்ளன.

ஆனால் பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் 204 பேரும், குடியரசு கட்சி சார்பில் 194 பேரும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதனால் செனட் சபையில் பிடனின் ஜனநாயக கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை