அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் இழுபறிக்கு இடையே ஜோ பிடன் முந்துகிறார்: டிரம்ப்பும் அதிக இடங்களை கைப்பற்றினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் இழுபறிக்கு இடையே ஜோ பிடன் முந்துகிறார்: டிரம்ப்பும் அதிக இடங்களை கைப்பற்றினார்

வாஷிங்டன்: உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், தற்போதைய அதிபர் டிரம்ப், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பிடன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஜோ பிடன் தொடர்ந்து முன்னிைல வகிக்கிறார்.

டிரம்ப்பும் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்று தொடங்கிய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று அதிகாலை நிறைவுபெற்றது.

உலகின் சக்தி வாய்ந்த பதவியாக கருதப்படும் அமெரிக்க அதிபர் பதவியை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச நாடுகளின் மத்தியில் எழுந்துள்ளது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் (74) மீண்டும் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோபிடன் (77) போட்டியிட்டார். ஜோ ஜோர்கென்சன் (லிபர்டேரியன் கட்சி), ஹோவி ஹாக்கின்ஸ், (கிரீன் கட்சி) மற்றும் 7 பேர் போட்டியிட்டாலும், டிரம்ப் - ஜோ பிடன் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.



அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறுபவரே அதிபர் ஆக முடியும். இந்த வாக்குப்பதிவில் கலிபோர்னியாவில் 55, டெக்சாஸில் 38, நியூயார்க் மற்றும் புளோரிடாவில் தலா 29, பென்சில்வேனியாவிலும், இல்லினாய்சிலும் தலா 20, ஓஹியோவில் 18, ஜார்ஜியாவிலும், மிச்சிகனிலும் தலா 16, வட கரோலினாவில் 15 வாக்குகள் உள்ளன.

மேற்கண்ட இந்த மாகாணங்கள்தான் அதிபரை முடிவு செய்யும் நிலையில் உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு பத்து கோடி பேர் தபால் முறையில் வாக்களித்துள்ளனர்.

மீதமுள்ள 6 கோடி வாக்காளர்கள், கொரோனா தடுப்பு நெறி முறைகளுடன் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப், புளோரிடாவில் தனது வாக்கை பதிவு செய்தார்.

முன்னாள் அதிபர் கிளின்டனும், அவரது மனைவி ஹிலாரி கிளின்டனும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மாநிலங்களில் ஒவ்வொன்றாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் பற்றி அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘வெற்றி பெறுவது எளிது; தோல்வியடைவது ஒருபோதும் எளிதானது அல்ல’ என்று குறிப்பிட்டார். ஜோ பிடன் கூறுகையில், ‘அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினரை மீட்டெடுப்போம்.

அமெரிக்காவில் நிலவும் நிறம் மற்றும் இன பாகுபாடுகள் களையப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இன்று அதிகாைல நிலவரப்படி முதல் வாக்குப்பதிவு நடைபெற்ற நியூ ஹாம்ப்ஷயர் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் உள்ள 5 வாக்குகளும், ஜோ பிடனுக்கு கிடைத்துள்ளது.

அதேபோல், 12 மைல் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு நகர் மில்ஸ்பீல்டில், 16 வாக்குகள் டிரம்புக்கும், 5 வாக்குகள் ஜோவுக்கும் கிடைத்துள்ளன. ஆக, அந்த தொகுதியில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

டெக்சாஸ், ஜார்ஜியா, புளோரிடா, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் வெர்மான்ட் போன்ற பகுதிகளில் ஜோ பிடன் முன்னிலை பெற்றார்.

கென்டக்கி, வர்ஜீனியா மற்றும் தென் கரோலினா, இன்டியானா ஆகிய இடங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலை பெற்றார்.

காலை 8 மணி நிலவரப்படி பிடனுக்கு 92 வாக்குகளும், டிரம்புக்கு 119 வாக்குகளும் கிடைத்தன. காலை 10 மணி நிலவரப்படி டொனால்ட் டிரம்புக்கு 118 வாக்குகளும் (48. 58%), ஜோ பிடனுக்கு 209 வாக்குகளும் (49. 79%) கிடைத்துள்ளன.

12 மணி நிலவரப்படி பிடனுக்கு 223 வாக்குகளும், டிரம்புக்கு 174 வாக்குகளும் கிடைத்தன. மதியம் 1 மணியளவில் ஜோ பிடன் 225 வாக்குகளும், டிரம்ப் 213 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றனர்.


 இவர்களில் யார் 270 வாக்குகள் பெறுகிறார்களோ அவர் தான் அதிபராக முடியும். தற்போதைய நிலையில் ஜோ பிடனே முன்னிலை வகிக்கிறார்.


சர்வதேச ஊடகங்களின் அறிக்கையின்படி, அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பிடன் தேர்வாக உள்ளார் என்றும், வாக்கு எண்ணிக்கை இந்திய நேரப்படி இன்றிரவு வரை நீடித்து, நாளை அதிகாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப்புக்கு டுவிட்டர் கண்டனம்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், தேர்தல் முடிவில் ஜோ பிடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிப்பதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜனநாயக கட்சியினர் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கிறார்கள்.

ஆனால், நாங்கள் அவ்வாறு செய்ய விடமாட்டோம். வாக்குப்பதிவு முடிந்தபின்னர் ஓட்டு போட முடியாது.

மிகப்பெரிய வெற்றி வரப்போகிறது. இன்று இரவு ஓர் அறிக்கை வெளியிடப்போகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.


இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சதி செய்ய முயற்சிப்பதாக கூறிய டிரம்பின் கருத்துக்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.   அதில், ‘டிரம்பின் பதிவு சர்ச்சைக்குரியதாக உள்ளது. இது தேர்தல் முடிவுகளை தவறாக வழிநடத்தும்’ என்றும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.



இந்திய வம்சாவளி வெற்றி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ராஜ கிருஷ்ணமூர்த்தி (47), தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். டில்லியில் பிறந்த ராஜ கிருஷ்ணமூர்த்தி, குடியரசு கட்சியின் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார்.

மொத்த வாக்குகளில் அவருக்கு 71 சதவீதம் கிடைத்தது. ராஜ கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலில் 2016ம் ஆண்டு பிரதிநிதிகள் சபைக்கு ராஜ கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிலாரியின் மறுபதிவு டுவிட்
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றப்  பிறகு பதிவிட்ட டுவிட்டர் பதிவை, நான்கு ஆண்டுகள் கழித்து ஹிலாரி கிளிண்டன்  தற்போது மீண்டும் மறுபதிவு செய்துள்ளார்.

குடியரசுக் கட்சித் தலைவரான ஹிலாரி கிளிண்டன் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர்  தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டார். இதில் அவர்  தோல்வியைத் தழுவினார்.
இதனையடுத்து டுவிட்டரில் அவர்  பதிவிட்டிருந்த கருத்தை தற்போது மீண்டும் மறு பதிவு செய்துள்ளார்.

அதில், ‘நம்பிக்கையை இழக்காதீர்கள். வேதம் நமக்கு  சொல்கிறது: நன்மை செய்வதில் சோர்வடைய வேண்டாம், ஏனென்றால் சரியான  நேரத்தில், நாம் அதன் பலனை அறுவடை செய்வோம்’  என்று பதிவிட்டுள்ளார்.

மேலும்  மற்றொரு மறுபதிவில், ‘நடப்பதைப் பார்க்கும்  அனைவரும் கண்காணித்து வருகிறார்கள். நீங்கள் மதிப்புமிக்கவர்,  சக்திவாய்ந்தவர், உலகின் ஒவ்வொரு வாய்ப்புக்கும் தகுதியானவர் என்பதில்  ஒருபோதும் சந்தேகமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையுடன் உள்ளோம்
ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறுகையில்,‘தேர்தல் முடிவால் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றியுள்ளவனாக உள்ளேன். ஒவ்வொரு வாக்கும் கணக்கிடப்படும் வரை காத்திருப்போம்.

இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவடையவில்லை. இந்த தேர்தல் முடிவு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

இன்னும் ஜோர்ஜியாவில் போட்டி நிலவுகிறது. நாங்கள் பென்சில்வேனியாவை வெல்லப்போகிறோம், ஆனால் வாக்கு எண்ணிகை முடிவு வெளியாக இன்னும் நேரம் எடுக்கும்’என்றார்.



.

மூலக்கதை