3 வயது குழந்தை ரயிலில் கடத்தப்படுவதாக புகார் : குற்றவாளியை பிடிக்க 241 கி.மீ நிற்காமல் சென்ற ரயில்!!

தினகரன்  தினகரன்
3 வயது குழந்தை ரயிலில் கடத்தப்படுவதாக புகார் : குற்றவாளியை பிடிக்க 241 கி.மீ நிற்காமல் சென்ற ரயில்!!

லலித்பூர், :மத்திய பிரதேசத்தில் 3 வயது குழந்தை ரயிலில் கடத்தி செல்லப்படுவதாக வந்த புகாரையடுத்து குற்றவாளியை பிடிக்க 241 கி.மீ தூரம் ரயில் நிற்காமல் சென்றது. ஆனால், கடைசி நேரத்தில் நடந்த சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் லலித்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணின் கணவர் தனது 3 வயது குழந்தையை அதிகாலை 3 மணியளவில் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாதது குறித்து, அந்த குழந்தையின் தாய் லலித்பூர் ஆர்பிஎப் ேபாலீசாரிடம் புகார் தெரிவித்தார். மேலும், அந்த பெண் தனது மகளை யாரோ ஒருவர் கடத்திச் சென்றதாகவும், கடத்தல்காரன் ரயிலில் தப்பிச் சென்றதாகவும் கூறினார். ஆனால், தனது கணவர் குழந்தையை தன்னுடன் தூக்கிச் சென்றதாக போலீசாரிடம் சொல்லவில்லை. இருந்தும், லலித்பூர் எஸ்பி எம்.எம்.பேக் தலைமையிலான குழுவினர், ரயில்நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த போது, ஒரு நபர் கையில் குழந்தையுடன் ராப்டினகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிச் சென்றது உறுதிசெய்யப்பட்டது. அதனால், ரயில்வே போலீசார் போபால் ரயில்வே ஸ்டேசனுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், எக்ஸ்பிரஸ் ரயில் வேறு எந்த ரயில் நிலையத்திலாவது நின்றால், குழந்தையை கடத்திச் செல்பவன் தப்ப வாய்ப்புள்ளதால், ரயிலை எங்கும் நிறுத்தாமல் சீக்கிரம் போபால் நிலையத்தில் நிறுத்த பைலட்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனால், ஜான்சி நிலையத்தில் ரயில் நிற்காமல் கிட்டத்தட்ட 241 கி.மீ தூரம் தாண்டியுள்ள போபால் நிலையத்தில் ரயில் நின்றது. குழந்தையுடன் ரயிலில் பயணம் செய்த குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறை மற்றும் ரயில்வே போலீசார் பிடித்தனர். அதன்பின், ரயில் புறப்பட்டு சென்றது. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது, குழந்தையை கடத்தியதாகக் கூறப்படும் நபர், குழந்தையின் தந்தை என்பதும், அந்த பெண் தன் கணவர்தான் குழந்தையை தூக்கிச் சென்றார் என்பதை மறைத்ததும் தெரியவந்தது. அதையடுத்து, அந்த குழந்தையும் தந்தையும் மீண்டும் லலித்பூருக்கு அழைத்து வரப்பட்டனர். புகார் தெரிவித்த பெண்ணிடம் போலீசார் தீர விசாரிக்காமல் எடுத்த நடவடிக்கையால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை