மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு அறிவிப்பு; தமிழக எம்பிக்கள் புறக்கணிப்பு: உறுப்பினராக ஏபிவிபி மாநில தலைவர் சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு அறிவிப்பு; தமிழக எம்பிக்கள் புறக்கணிப்பு: உறுப்பினராக ஏபிவிபி மாநில தலைவர் சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: கட்டிடம் கூட கட்ட தொடங்கப்படாதநிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. எம்.

கட்டோச் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் உறுப்பினராக ஏபிவிபி மாநில தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாகக் குழுவில் தமிழக எம்பிக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள தகவல்வெளியாகியுள்ளன.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் ரூ. 1,264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பான் நிறுவனம் கொடுக்கும் கடன் அளவை பொருத்தே அமையும் என்று மக்களவையில்  ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக கட்டிட வேலைகள் தொடர்பான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. கடந்த மே மாதம் சுற்றுசுவர் மற்றும் சாலைகள் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன.



ஆனால், கட்டிடப் பணிகள் எதுவும் தற்போது நடைபெறவில்லை. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரை இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றி வரும் வி. எம். கட்டோச், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.   அவருடன், 17 பேர் ெகாண்ட உறுப்பினர்கள் பட்டியலில் எம். ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள சுதா சேஷய்யன், மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர், எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர், நிதித் துறை கூடுதல் செயலாளர், குடும்ப நலத்துறை செயலாளர், தமிழக அரசின் தலைமை செயலாளர், இந்திய அறிவியல் காங்கிரஸ் அசோசியேசன் ெபாதுமேலாளர் விஜய் லட்சுமி சக்சேனா, டெல்லி எய்ம்ஸ் நரம்பியல் நிபுணர் காமேஸ்வர் பிரசாத், ஜோத்பூர் எய்ம்ஸ் பேராசிரியர் பங்கஜ ராகவ், சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி அறுவை சிகிச்சை நிபுணர் பிரசாந்த் லாவண்யா, கீழ்ப்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சண்முகம் சுப்பையா ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

7 பிரிவுகளாக தகுதிகளின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், 4வது பிரிவில் ஓரிடமும், 7வது பிரிவில் எம்பிக்களுக்கான 3 இடங்களும் காலியாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ெவளியிட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏபிவிபி தலைவராக உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் அறுவைசிகிச்சைப் பிரிவு மருத்துவர் சண்முகம்  சுப்பையா நியமனம் செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்,‘விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சண்முகம் சுப்பையாவை நியமித்திருப்பது அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதற்காகவா?

அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா? இது தான் மனுசாஸ்த்திரத்தின் வழி ஆட்சியோ?’என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ‘பெண்ணை துன்புறுத்திய குற்றச் சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பெண்களை அவமதிப்பதில்லையா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் எம்பிக்கள் 3 பேர் நியமிக்கப்படாமல், காலியிடம் என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.

இதனால் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே காலியிடம் என்று அறிவித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கட்டுமானப் பணிகளே தொடங்கப்படாதநிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை