மத்திய பிரதேச இடைத்தேர்தலில் வார்த்தை போர் : ‘அயிட்டம்’ சர்ச்சை முடிந்து இப்போ ‘சுன்னு-முன்னு’; தேர்தல் ஆணையத்தின் நோட்டீசால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
மத்திய பிரதேச இடைத்தேர்தலில் வார்த்தை போர் : ‘அயிட்டம்’ சர்ச்சை முடிந்து இப்போ ‘சுன்னுமுன்னு’; தேர்தல் ஆணையத்தின் நோட்டீசால் பரபரப்பு

போபால், :மத்திய பிரதேச இடைத்தேர்தலில் தலைவர்களின் வார்த்தை போர் முற்றிய நிலையில் ‘அயிட்டம்’ சர்ச்சை முடிந்து இப்போ ‘சுன்னு-முன்னு’ பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற நவ. 3ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக - காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்களுக்கிடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், கடந்த சில நாட்களுக்கு முன் அம்மாநில பாஜ பெண் அமைச்சரான இம்ராதி தேவியின் பெயரை குறிப்பிடாமல் ‘அயிட்டம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசினார். இது, தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் கூட கண்டனம் தெரிவித்தார். ஆனால், கமல்நாத் தான் கூறிய கருத்து திரித்துக் கூறப்பட்டதாக தெரிவித்தார். இவரது பேச்சுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் பதிலளித்த நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில், ‘இது இதுபோன்ற வார்த்தைகளை தேர்தல் பிரசாரங்களில்பயன்படுத்தக் கூடாது’ என்று கமல்நாத்துக்கு அறிவுறுத்தியது. மேலும், ‘நடத்தை விதிமுறை நடைமுறையில் இருக்கும்போது,  ​​சர்ச்சைக்குரிய அந்த வார்த்தையை  பயன்படுத்தவோ அல்லது பொதுவெளியில் இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிடவோ  கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்னை கொஞ்சம் ஓய்ந்த நிலையில், தற்போது பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா பேசிய வார்த்தை புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவர், இந்தூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங் மற்றும் கமல்நாத் ஆகியோருக்கு எதிராக ‘சுன்னு-முன்னு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். ‘சுன்னு-முன்னு’ என்பது இந்தியில் வெளியான சிறுவர்களுக்கான இரு கார்டூன் கதாப்பாத்திரங்கள். இதனை கிண்டலாக குறிப்பிட்டு, கைலாஷ் விஜயவர்ஜியா பேசியதாக சலசலப்பு ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டதால், இந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க விஜயவர்ஜியாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘அறிவிப்பு வந்த 48 மணி  நேரத்திற்குள் உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். உங்களுக்கு இது ஒரு  வாய்ப்பாக வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யாவிட்டால், மேலதிக தகவல்களை உங்களுக்கு  வழங்காமல் முடிவு அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காங். மூத்த தலைவர் கமல் நாத் தனது சர்ச்சை பேச்சால், தேர்தல் ஆணையத்திடம் நோட்டீஸ் பெற்றார். தற்போது பாஜக தலைவர் விஜயவர்ஜியாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கேட்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய பிரதேச தேர்தலில் தலைவர்களின் சர்ச்சை பேச்சுகளால் தேர்தல் ஆணையம் அடுத்தடுத்த நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை