பாக்.,கில் குண்டு வெடிப்பு ஏழு குழந்தைகள் பலி

தினமலர்  தினமலர்
பாக்.,கில் குண்டு வெடிப்பு ஏழு குழந்தைகள் பலி

பெஷாவர்:பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், நேற்று நடந்த குண்டு வெடிப்பில், ஏழு குழந்தைகள் பலியாயினர். 70 பேர், படுகாயம் அடைந்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பெஷாவர் நகரில், மத போதனைகள் தொடர்பான நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், காலை பிரார்த்தனைக்காக, பெரியவர்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது, அந்த நிகழ்ச்சி நடந்த இடத்தின் சுற்றுச்சுவர் அருகே வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின.

இந்த பயங்கர சம்பவத்தில், ஏழு குழந்தைகள் பலியாயினர். பலத்த காயமடைந்த, 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும், 7 - 11 வயதுக்கு உட்பட்டவர்கள்.இந்த தாக்குதலுக்கு, பயங்கரவாத அமைப்பினர் யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

குண்டுவெடிப்பில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் இம்ரான் கான், ''காயமடைந்த குழந்தைகளுக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்படும். காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்,'' என்றார்.

மூலக்கதை