ஓட்டலில் தேர்தல் விருந்தளிக்க டிரம்புக்கு அனுமதி கிடைக்குமா?

தினமலர்  தினமலர்
ஓட்டலில் தேர்தல் விருந்தளிக்க டிரம்புக்கு அனுமதி கிடைக்குமா?

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தல் நாளன்று, வாஷிங்டனில் உள்ள தன் ஓட்டலில், பிரமாண்ட விருந்து அளிக்க, அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார். 'ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளதால், இதற்கு அனுமதி அளிக்க முடியாது' என, நகர மேயர் கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், அடுத்த மாதம், 3ல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.'கொரோனா வைரஸ் பரவல் குறித்து மிகவும் அலட்சியமாக செயல்படுகிறார்' என, டிரம்ப் மீது குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

இந்நிலையில், தேர்தல் நாளன்று, பிரமாண்ட விருந்து நிகழ்ச்சிக்கு, டிரம்ப் ஏற்பாடு செய்து உள்ளதாக தெரிகிறது. வாஷிங்டனில் உள்ள டிரம்புக்கு சொந்தமான ஓட்டலில் இதை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இதற்கு வாஷிங்டன் நகர பெண் மேயரான, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முரியல் பிரவுசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்;

அவர் கூறியுள்ளதாவது:வைரஸ் பரவலால், நகரில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரே நேரத்தில், 50 பேருக்கு மேல் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதியில்லை. இந்த நிலையில், தன் ஓட்டலில் விருந்தளிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து உள்ளன. இது தொடர்பாக, ஓட்டல் நிர்வாகத்துடன் பேசப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அதிபரின் வெள்ளை மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, நகர மேயரின் அனுமதி தேவையில்லை. அதே நேரத்தில், ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி பெற வேண்டும். ஆனால், இதுவரை, ஓட்டல் நிர்வாகம் அவ்வாறு அனுமதி ஏதும் கோரவில்லை எனத் தெரிகிறது.ஏற்கனவே, பல்வேறு சம்பவங்களில், டிரம்புக்கும், பிரவுசருக்கும் இடையே மோதல் உள்ளது.

இந்நிலையில், விருந்துக்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பிலடல்பியாவில் ஒரே நாளில், மூன்று பிரசார கூட்டங்களில், டிரம்ப் பங்கேற்றார்; அப்போது அவர் பேசியதாவது:ஜோ பிடன், சீன ஆதரவாளர். அவர் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் தலைதுாக்கும். சோஷலிச கொள்கைகள் புகுத்தப்படும். நம் நாட்டுக்கு அது உகந்தது அல்ல. இவ்வாறு, அவர் பேசினார்.

பேரணியை தவிர்க்கும் பிடன்டெலவர் பகுதியில், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். எங்கள் பிரசார கூட்டங்களில் இதை கடைப்பிடித்து வருகிறோம். டிரம்ப் இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.வைரஸ் பரவலுக்கு காரணமாகி விடக் கூடாது என்ற பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதனால் தான், பேரணிகள் நடத்துவதை தவிர்த்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை