நம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020

தினமலர்  தினமலர்
நம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020

துபாய்: ‘‘மும்பைக்கு எதிராக ‘சூப்பர் ஓவரில்’ கிடைத்த வெற்றிக்கு பின் நம்பிக்கை அதிகரித்தது,’’ என, பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

எமிரேட்சில் நடக்கும் 13வது ஐ.பி.எல்., சீசனில் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி பங்கேற்ற முதல் 7 போட்டியில், ஒரு வெற்றி, 6 தோல்வியை பெற்றது. அதன்பின் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவு செய்தது. இதில் நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிராக இரண்டு ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது. சமீபத்தில் ஐதராபாத் அணிக்கு (114/10, 19.5 ஓவர்) எதிரான போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி (126/7, 20 ஓவர்) வெற்றி பெற்றது.

இதுகுறித்து பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் கூறியது: ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவது குறித்து சிந்திக்கவில்லை. ஒவ்வொரு போட்டியாக திட்டமிட்டு விளையாடி வருகிறோம். மும்பைக்கு எதிரான போட்டியில் இரண்டு ‘சூப்பர் ஓவரில்’ கிடைத்த வெற்றிக்கு பின், எங்கள் அணி வீரர்களிடம் தன்னம்பிக்கை அதிகரித்தது. அணியின் வெற்றிக்காக எங்களால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

தொடர்ச்சியாக 4 போட்டியில் கிடைத்த வெற்றிக்கு பவுலர்கள் முக்கிய காரணம். ‘சுழலில்’ ரவி பிஷ்னாய் அசத்துகிறார். அதிகமாக ரன் வழங்குவதை கட்டுப்படுத்துகிறார். பந்துவீச வாய்ப்பு கிடைக்கும் போது, முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியில் திருப்பம் ஏற்படுத்துகிறார்.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நாங்கள் இமாலய இலக்கை நிர்ணயிக்கவில்லை. இதனால் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட முடிவு செய்தோம். திட்டங்களை எங்கள் பவுலர்கள் சரியாக செயல்படுத்தியதால் குறைந்த இலக்கை ‘சேஸ்’ செய்யவிடாமல் தடுத்து வெற்றி பெற முடிந்தது. இத்தொடரில் எனது செயல்பாடு திருப்தி அளிக்கிறது.

இவ்வாறு அர்ஷ்தீப் சிங் கூறினார்.

மூலக்கதை