பஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020

தினமலர்  தினமலர்
பஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020

சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில் பஞ்சாப் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி, மார்கன் வழிநடத்தும் கோல்கட்டா அணியை சந்திக்கிறது. இந்த சீசனில் இவ்விரு அணிகள் மோதிய லீக் போட்டியில் கோல்கட்டா அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

 

ராகுல் நம்பிக்கை: பஞ்சாப் அணி, 11 போட்டியில் 5 வெற்றி, 6 தோல்வி என, 10 புள்ளிகளுடன் உள்ளது. கடைசியாக பெங்களூரு, மும்பை, டில்லி, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தது. இன்றும் அசத்தினால் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்யலாம். பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (567 ரன்கள்), மயங்க் அகர்வால் (398), நிக்கோலஸ் பூரன் (327) நம்பிக்கை அளிக்கின்றனர். ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடாத அகர்வால் இன்று லெவன் அணிக்கு திரும்பலாம். கெய்ல் (126), மேக்ஸ்வெல் (102) கைகொடுத்தால் நல்லது. வேகத்தில் முகமது ஷமி (17 விக்கெட்), அர்ஷ்தீப் சிங் (9), ‘சுழலில்’ ரவி பிஷ்னாய் (10), முருகன் அஷ்வின் (8) பலம் சேர்க்கின்றனர்.

 

வருண் அபாரம்: கோல்கட்டா அணி 11 போட்டியில், 6 வெற்றி, 5 தோல்வி என, 12 புள்ளிகளுடன் உள்ளது. கடைசியாக டில்லிக்கு எதிராக வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ள கோல்கட்டா அணி, இன்றும் சாதித்தால் 14 புள்ளிகளுடன் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.

பேட்டிங்கில் சுப்மன் கில் (321 ரன்), கேப்டன் இயான் மார்கன் (295) ஆறுதல் தருகின்றனர். தினேஷ் கார்த்திக் (148) எழுச்சி பெற வேண்டும். டில்லிக்கு எதிராக அரைசதமடித்த சுனில் நரைன், நிதிஷ் ராணா (265) மீண்டும் அசத்தலாம்.

‘சுழலில்’ தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி (12 விக்கெட்) அசத்துகிறார். இவருக்கு சுனில் நரைன் (5) ஒத்துழைப்பு தர வேண்டும். வேகத்தில் கம்மின்ஸ் (6) விக்கெட் வேட்டை நடத்தினால் நல்லது.

மூலக்கதை