கூட்டம் ஓட்டாக மாறுமா?

தினமலர்  தினமலர்
கூட்டம் ஓட்டாக மாறுமா?

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துவிட்டது. இந்த தேர்தல், முதன் முறையாக கொரோனா வைரஸ் காலத்தில் நடப்பதால், பல முன்னேற்பாடுகளை செய்துள்ளது, தேர்தல் ஆணையம்.

ஆனால், மக்கள் எதையும் பொருட்படுத்தாமல், பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கின்றனர். ஒரு பக்கம், நிதிஷ் குமார்- தலைமையில், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற கூட்டணி. மற்றொரு பக்கம், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணி களத்தில் உள்ளன.ஆளும் கட்சி கூட்டணி தான் வெற்றி பெறும் என கூறியவர்கள், இப்போது தேஜஸ்வியின் பிரசாரம், அவருக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். நிதிஷ் குமாருக்கு சரியான போட்டி என்கின்றனர்.

'ஜாதி பாகுபாடே இருக்கக் கூடாது' என, அனைத்து கட்சிகளும் கூறினாலும், வேட்பாளர்களை ஜாதி ரீதியாக தான் தேர்வு செய்கின்றனர். வட மாநிலங்களில் ஜாதி அரசியல் மிகவும் அதிகம்; இப்படி ஜாதி அரசியலை வைத்து, முதன் முதலாக, உ.பி.,யில் முதல்வரானவர் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.லாலுவின் கட்சி, யாதவ சமுதாய ஓட்டுக்களை வைத்தே அரசியல் நடத்தி வருகிறது. சிறுபான்மையினரும் இந்த கட்சிக்கு, காலம் காலமாக ஓட்டளித்து வருகின்றனர்.ஆளும் கட்சி கூட்டணி, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர்கள் ஓட்டுக்களை அள்ள முயற்சித்து வருகிறது.தேஜஸ்வி இப்போது புதிய வியூகத்தை வகுத்துள்ளார். 'ஒய்... ஒய்' என்ற வியூகம் தான், அது. முதல் ஒய், யாதவ சமூகத்தை குறிக்கும். இரண்டாவது ஒய், '-யூத்' எனப்படும் இளைஞர்கள்.'வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு வேலை தரப்படும்' என, வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனால் இவரது கூட்டங்களுக்கு, மக்கள் அலை மோதுகின்றனர். லாலுவைப் போல, எப்போதும் மோடியை விமர்சிக்காமல், நிதிஷ் குமாரை மட்டுமே கடுமையாக தாக்கி வருகிறார் தேஜஸ்வி. ராகுலுடன் இணைந்து பிரசாரம் செய்யும் போது, ராகுல் மோடியை தாக்கினாலும், தேஜஸ்வி அதிகம் மோடியை எதிர்த்து பேசுவதில்லை. 'எதிர்காலத்தில் அரசியல் எப்படியிருக்குமோ... எதற்கு மோடியை தேவையில்லாமல் பகைக்க வேண்டும்' என்ற, முன் எச்சரிக்கை தான் காரணம். 'பீஹாரில், யார் பிரசாரம் செய்தாலும், கூட்டம் அதிகம் வரும்; அதை வைத்து தேஜஸ்வி முதல்வர் ஆகிவிடுவார் என கணிப்பது தவறு' என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள்.

மூலக்கதை