கிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ஈடுபடும் ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபடும் ஸ்டாலின்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், நீலாங்கரை முதல் கோவளம் வரை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'சைக்கிளிங்' சென்று உடற்பயிற்சி மேற்கொள்கிறார்.

சென்னை, நீலாங்கரையில், ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீடு உள்ளது. இங்கு, சனி, ஞாயிறு நாட்கள் தங்கியிருக்கும் ஸ்டாலின், அதிகாலையில் சைக்கிளிங் சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.கோவளத்திற்கு முன், முட்டுக்காடு படகுத்துறை அருகில் உள்ள பாலம் பிரசித்தி பெற்றது.அதிகாலையில், இந்த பாலத்தின் இருபுறமும், கடல் நீரும், ஆற்று நீரும் சேரும் காட்சி, ரம்மியமாக இருக்கும். சூரியன் உதிப்பதையும், மறைவதையும், இந்த பாலத்தில் நின்று பார்த்தால், மிக அழகாக இருக்கும்.

எனவே, அதிகாலையில் சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு மாணவ - மாணவியர், கிழக்கு கடற்கரை சாலையில், 'சைக்கிளிங்' சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஸ்டாலினும், சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில், இங்கு சைக்கிள் ஓட்டுகிறார். நேற்று காலையில், 'மவுன்டைன் பைக்கிங் ஹெல்மெட்' அணிந்து, சைக்கிள் ஓட்டிச் சென்றார்.

அப்போது, ஈஞ்சம்பாக்கம் அருகில் நின்றிருந்த இளைஞர்களிடம் நலம் விசாரித்தார். அவர்களின் படிப்பு, வேலை பற்றியும் விசாரித்தார். பனையூர் சுங்கச்சாவடி அருகில் உள்ள கடையில், தேனீர் அருந்தினார். பின், கோவளம் பாலம் அருகில் நின்று, இயற்கை காட்சியை ரசித்தார். ஸ்டாலினின் சைக்கிள் பயண வீடியோ, சமூக வலைதளங்களில், நேற்று பரவியது.

- நமது நிருபர் -

மூலக்கதை