போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.4,545 கோடி இழப்பு

தினமலர்  தினமலர்
போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.4,545 கோடி இழப்பு

ஊரடங்கில், அரசு பஸ்களின் வருவாயில், 4,545 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க, போக்குவரத்து கழகங்கள், மேலும் கடன் பெற்றுள்ளதால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.

கொரோனா பரவலை தடுக்க, மார்ச் இறுதி முதல் ஊரடங்கு அமலானதால், அரசு போக்குவரத்துக் கழகங்களில், 22 ஆயிரத்து, 542 பஸ்களின் இயக்கம் முடங்கியது.அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில், போக்குவரத்துக் கழக புள்ளி விபரப்படி, பயணியர் டிக்கெட் கட்டண வசூல் மூலம், 24.19 கோடி ரூபாய், இதர வருவாய் மூலம், 4.91 கோடி ரூபாய் என, தினமும் சராசரியாக, 29.10 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.

40 சதவீத பஸ்கள்

தொடர்ச்சியாக, 160 நாட்கள் பஸ்கள் இயக்கப்படாததால், 4,656 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது. செப்., 1 முதல், பஸ்கள் இயக்கத்துக்கு வந்த நிலையில், முதல் இரு வாரங்கள், 30 முதல், 40 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன.தொழிற்சங்கங்களின் போர்க் கொடியால், தற்போது, 60 முதல், 70 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், பயணியர் எண்ணிக்கை சரிந்து வருவதால், அதற்கேற்ப, வருவாயும் குறைந்து காணப்படுகிறது.

செப்., 1ல் துவங்கி, அக்., 24 வரை, 1,571 கோடி ரூபாய் வர வேண்டிய நிலையில், 500 கோடி ரூபாய் மட்டும் கிடைத்துள்ளது. இதன்மூலம், ஊரடங்கில் போக்குவரத்துக் கழக இழப்பு, 5,727 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதே நேரம், எரிபொருள், சுங்க கட்டணம், தேய்மானம் வகையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு, 1,182 கோடி ரூபாய் வரை செலவினம் மிச்சமாகி உள்ளதால், ஊரடங்கு கால இழப்பு என்பது, 4,545 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி

போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்கனவே, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ள நிலையில், தற்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க, தமிழ்நாடு போக்கு வரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடம், 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெறப்பட்டுள்ளது.பணிமனை, அலுவலகங் கள் பெயரில், வங்கிகளில் கடன் பெறப்பட்டுள்ளதால், நிதி நெருக்கடியால், போக்குவரத்துக் கழகங்கள், கடனில் சிக்கி தவிக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளித்தால் மட்டுமே, கடனில் இருந்து மீள முடியும்.

'நிதி ஒதுக்கினால் தான் தீர்வு'தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் சி.ஐ.டி.யூ., மாநில துணைத் தலைவர் அன்பழகன் கூறியதாவது:பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்து துறையில், லாப, நஷ்ட கணக்கு பார்ப்பது இயலாது. பஸ்களின் இயக்கத்தில் வருவாய், செலவு இடையிலான இழப்பு தொகையை, ஆண்டுதோறும் மாநில அரசு, பட்ஜெட்டில் ஒதுக்கினால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

ஆண்டுதோறும் புது பஸ்களை வழங்குவதாக தெரிவிக்கும் அரசு, அதற்கான எரிபொருள் கட்டண உயர்வை வழங்குவதில்லை. அத்துடன், அரசு சார்பில், மக்களுக்கு வழங்கப்படும் இலவசம், சலுகை பாஸ்களுக்கான மானியத் தொகையும் வழங்குவதில்லை. போக்குவரத்துக் கழகங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

மூலக்கதை