நல்லனவற்றுக்கு சனாதன தர்மமே எடுத்துக்காட்டு!

தினமலர்  தினமலர்
நல்லனவற்றுக்கு சனாதன தர்மமே எடுத்துக்காட்டு!

வாகை சூடிய பெண் தெய்வங்களாக, துர்கை, காளி போன்றவர்களை எடுத்துக்காட்டாக முன்நிறுத்துகிறது சனாதனம். தசரதன் உயிரை போர்க்களத்தில், கைகேயி காப்பாற்றுவதை, ராமாயணம் சொல்கிறது. அரசாண்ட பெண்களை சனாதனம் போற்றுகிறது. குந்தவை போன்றவர்கள், அரசை வழிநடத்தியிருக்கின்றனர்.

திறமை வாய்ந்த பெண்கள்

வேலு நாச்சியார், குயிலி, கிட்டூர் ராணி சென்னம்மா, ராணி பத்மாவதி, ஜான்சிராணி லட்சுமிபாய் போன்ற வீரப் பெண்களை, சனாதனம் பெற்றெடுத்து இருக்கிறது. பதஞ்சலி முனிவர் தன், 'மஹாபாஷ்யம்' என்ற நுாலில், ஈட்டி எறிவதில் திறமை வாய்ந்த 'சக்திகி'கள் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். கவுடில்யரின், 'அர்த்த சாஸ்திரம்' நூலில், மவுரியப் படைகளில், வில்லம்புகளுடன் போரிடும் திறமை வாய்ந்த பெண்களும் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

கிரேக்க நாட்டுத் துாதுவரான மகஸ்தனிஸ் என்பவர், சந்திரகுப்த மவுரியரைப் பாதுகாக்க, பெண் மெய்க்காவலர்களும் இருந்ததாக, தன் நுாலில் குறிப்பிட்டுள்ளார். இப்படி சனாதன தர்மம், பெண்மையைப் போற்றி வந்தது. ஆனால் சமூகம் தனக்கான சட்ட திட்டங்களை கொண்டு வந்தபோது பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஆண்களின் சிந்தனை, சனாதனத்தை மறந்தது. ஸ்மிருதிகள் அதிகமாக எழுதப்பட்டன. அதில் பெண்ணடிமைக் கருத்துகள் நுழைக்கப்பட்டன.

இதன் காரணமாக நாளடைவில் சமூகத்தில், காட்டுமிராண்டித் தனமான கொள்கைகள் வலுப்பெறத் துவங்கி, சதி என்கிற உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், மறுமணம் செய்வதை கண்டித்தல், பெண்களுக்கு கல்வி மறுப்பு போன்ற தீய பழக்க வழக்கங்கள் வலுப்பெற்றன. சமூகம் கடைப்பிடித்து வந்தஇக்கொடிய பழக்க வழக்கங்களை, சனாதனம் எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறது.

சனாதனத்தை தீவிரமாக உள்வாங்கியவர்கள், சமூகத்தை சீர்திருத்த முனைந்தனர். ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யா சாகர், சுவாமி விவேகானந்தர், பாரதியார், காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர் போன்றோர், சமூக கேடுகளை களைவதற்கு பாடுபட்டனர். சமூகத்தில் ஏற்பட்ட தீய பழக்க வழக்கங்களை எதிர்கொள்ள அவர்கள், சனாதனம் என்ன சொல்லியிருக்கிறது என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகள் கூறித்தான், மக்களை செம்மைப்படுத்தினர்.உதாரணத்திற்கு, பெண்களுக்கு சொத்துரிமை இல்லாத சூழ்நிலை இருந்தது.

சமூக சீர்திருத்தவாதிகள்

அம்பேத்கர், ஹிந்து தர்ம நுால்கள் அல்லது சில ஸ்மிருதிகளில், பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை, ஆதாரத்துடன் எடுத்துக் காட்டித்தான், பெண்களுக்கான ஹிந்து சட்டத்தை கொண்டு வர, பெரும் முயற்சி செய்தார். ஒவ்வொரு தீய பழக்க வழக்கத்தையும் எதிர்கொள்ளும்போதெல்லாம், சமூக சீர்திருத்தவாதிகள், சனாதன தர்மம் என்ன சொல்லியிருக்கிறது என்பதை, மக்களுக்கு ஆணித்தரமாக எடுத்து இயம்பித்தான் செய்திருக்கின்றனர்.

அதனால் சமூக சீர்கேடுகளுக்கு, சனாதனத்தைபொறுப்பாக்குதல் அறிவுடைமையாகாது. பதிலாக சனாதன தர்மத்தை மீண்டும் வலியுறுத்துவதன் மூலமே, பெண்மையை போற்ற முடியும். அதைச் செய்வோம்!

ம.வெங்கடேசன்
எழுத்தாளர்
venkiambeth@gmail.com

மூலக்கதை