குமுறல்!கவர்னர் புரோஹித் மவுனத்தால் தமிழக அரசியல் கட்சிகள்

தினமலர்  தினமலர்
குமுறல்!கவர்னர் புரோஹித் மவுனத்தால் தமிழக அரசியல் கட்சிகள்

சென்னை:மருத்துவ கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மவுனம் சாதிப்பதால், தமிழக கட்சிகள் தங்கள் குமுறலை கொட்டத் துவங்கி விட்டன. இடஒதுக்கீடு கிடைக்குமா என்பதில் சர்ச்சை நீடிப்பதால், இப்பிரச்னையில், அ.தி.மு.க., அரசு உண்மைகளை மறைப்பதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ கல்வியில், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

300 இடங்கள்



இந்த சட்டம் அமலுக்கு வந்தால், மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 300 இடங்கள் வரை கிடைக்கும். எனவே, சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் பெற, அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, அமைச்சர்கள் ஜெயகுமார், சண்முகம், விஜய பாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர், சமீபத்தில் கவர்னரை சந்தித்து வலியுறுத்தினர்.

இப்பிரச்னையில் விரைந்து முடிவெடுக்கும்படி, கவர்னருக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, நான்கு வாரம் அவகாசம் தேவைப்படுவதாக, கவர்னர் பதில் அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து, கவர்னர் தாமதம் செய்வதை கண்டித்து, தி.மு.க., சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், இப்பிரச்னையில் கவர்னருக்கு கோரிக்கை விடுத்து உள்ளன. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். அது எப்போது நடக்கும் என, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நெருக்கடி

தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என, பேசத் துவங்கி உள்ளன.இந்த இக்கட்டான சூழலில், உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் தர, கவர்னர் அவகாசம் கேட்டுள்ளார். சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெறப்பட்டு, அதனடிப்படையில் முடிவெடுக்கப் போவதாக, கவர்னர் தெரிவித்திருக்கிறார்.அதனால், மருத்துவ கலந்தாய்வை உடனே நடத்த முடியாமல், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

ஆனாலும், உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு, கவர்னர் ஒப்புதல் தந்த பின்னரே, கவுன்சிலிங் நடத்தப்படும் என, அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதனால், இந்த விவகாரத்தில், விரைவாக முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், கவர்னருக்கு ஏற்பட்டு உள்ளது.

மவுனம்



இதற்கிடையில், அ.தி.மு.க., மட்டுமின்றி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், இச்சட்ட விவகாரத்தில், தங்கள் குமுறலை வெளிப்படுத்தத் துவங்கி விட்டன. அவற்றை சமாளிக்கும் விதமாக, விரைவில் கவர்னர் நல்ல முடிவை எடுக்கஉள்ளதாக, அமைச்சர்கள் ஜெயகுமார், சண்முகம் ஆகியோர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், கவர்னரின் மவுனத்தால், இடஒதுக்கீடுதொடர்பான சர்ச்சை நீடிப்பதால், இப்பிரச்னையை மையமாக வைத்து, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்யத் துவங்கி விட்டன.

இது தொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இப்பிரச்னையில் தமிழக அரசு உண்மைகளை மறைத்து, மாணவர்களை ஏமாற்றி வருவதாக, ஆவேசம் காட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு அமைத்த, நீதிபதி கலையரசன் குழு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ கல்லுாரிகளில், 10 சதவீதம் இடங்களை ஒதுக்க, பரிந்துரை செய்திருந்தது. ஆனால், நீதிபதியின் பரிந்துரைக்கு மாறாக, தன்னிச்சையாக, இடஒதுக்கீட்டை 7.5 சதவீதமாக, அரசு குறைத்துள்ளது. அரசின் பொறுப்பற்ற செயலால், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 100 இடங்கள், இப்போதே பறிபோய் விட்டன. இவ்விவகாரத்தில், பல உண்மைகளை, அ.தி.மு.க., அரசு மறைத்து, மாணவர்களை ஏமாற்றி வருகிறது.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

தி.மு.க., துணை பொதுச்செயலர் பொன்முடி வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க.,வின், 'நீட்' தேர்வு நாடகத்தின் சாயம், தி.மு.க., போராட்டத்தால் வெளுத்து விட்டது. 'ஸ்டாலின் கூறியது போல முதுகெலும்பு இருந்தால், இன்றோ, நாளையோ, 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு, கவர்னருக்கு கெடு விதித்து, ஒப்புதலை பெறுங்கள்' என, சவால் விட்டுள்ளார். இப்பிரச்னை தொடர்பாக, கவர்னரை நேற்று மாலை, முதல்வர் இ.பி.எஸ்., சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது; ஆனால், சந்திப்பு நடக்கவில்லை.

மூலக்கதை