7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

சென்னை: மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7. 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரையும், அதற்கு அழுத்தம் தரத் தவறிய அதிமுக அரசையும் கண்டித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு இன்று காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7. 5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த மாதம் 15ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. அந்த மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் இதுவரை அந்த மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பை நினைத்து பார்க்க முடியாத நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.எனவே, உடனடியாக 7. 5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் திமுக தலைவர் தமிழக ஆளுநருக்கு கடந்த 21ம் தேதி கடிதம் ஒன்றை எழுதினார், அதில், ‘முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக  ஒப்புதல் வழங்குங்கள்’ என்றும் தெரிவித்திருந்தார். மு. க. ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு நேற்று முன்தினம் பதில் அளித்த ஆளுநர், ‘நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்துக் கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்தி வருகிறேன்.

இது குறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது’ என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு, ‘ஏற்கனவே ஒரு மாத காலம் அவகாசம் முடிந்து விட்டது. இந்த நிலையில் குறைந்தபட்சம் மேலும் ஒரு மாதம் என்பது 7. 5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நீர்த்துப் போக வைப்பதாகும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனுக்கு முற்றிலும் எதிரானது. 7. 5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் பெற அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார்.

அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து முதல்வர் என்ன வகையான போராட்டம், எந்த தேதியில் போராட்டம் என்பதை அறிவிக்க வேண்டும்’ என்று மு. க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7. 5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும்- தமிழக ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க தவறி, மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும் 24ம் தேதி (இன்று) திமுக சார்பில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: நீட் என்பது பல்வேறு கொடுமைகளை ஓரு அநீதியை, ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு பலி பீடமாக வந்திருக்கிறது. அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டிய நிலையை சிதைத்து, கோச்சிங் சென்டர் என்ற பெயரிலே லட்சக்கணக்கில் பணம் செலுத்தி ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக கல்வியை மாற்றியிருக்கக்கூடிய திட்டம் தான் இந்த நீட்.

நடைபெற்று கொண்டிருக்க கூடிய நீட் தேர்விலே ஆள்மாறாட்டம் நடந்திருக்கிறது. அந்த ரிசல்ட்டை  வெளியிடுவதிலே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருக்கிறது.

அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஒரு குழப்பமான நிலை நீட் தேர்விலே அமைந்து கொண்டிருக்கிறது.

திமுகவை பொறுத்தவரை நமக்கு என்று இருக்கக்கூடிய கொள்கை,  நீட் ஒரு காலமும் இருக்கக்கூடாது என்பது தான் கொள்கை. கலைஞர் முதல்வராக இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை.ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை நீட் தமிழ்நாட்டிலே நுழைய முடியவில்லை. ஆனால் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலே இருக்கக்கூடிய அதிமுக ஆட்சியிலே,  ஒரு அடிமையாக இருக்கின்ற காரணத்தால் இந்த நீட் நுழைந்து இருக்கிறது.

எடப்பாடியை பொறுத்தவரையிலே அஞ்சி நடுங்கி,  கூனி குறுகி,  முதலமைச்சர் பதவியை பெறுவதற்காக எப்படி காலிலே விழுந்து அந்த பதவியை பெற்று இருக்கிறாரே, அதே ேபால பதவியை காப்பாற்றி கொள்வதற்காக அதை அவர் அனுமதிக்க இசைவை தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ம் தேதி சட்டமன்றத்திலே தமிழகத்தை பொறுத்தவரை நீட்டுக்கு விலக்கு தந்திட வேண்டும் என்று,  2 மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்படுகிறது.தீர்மானம் டெல்லிக்கு அனுப்பப்படுகிறது.   ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த மசோதாக்கள் தமிழகத்திற்கு  திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.

எப்போ, 7 மாதம் கழித்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த செய்தியை எடப்பாடி அரசு சொன்னார்களா? சட்டமன்றத்திலே சொன்னார்களா? அறிக்கையாக வெளியிட்டார்களா? பத்திரிகை செய்தியாக வெளியிட்டார்களா? ஆனால் நீதிமன்றத்திற்கு அந்த செய்தி வருகிறது.

23 மாதம் கழித்து தான் நமக்கு அந்த செய்தி தருகிறது. அதை நான் சட்டமன்றத்திலே ஆதாரத்தோடு எடுத்து வைத்தேன்.

அதை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார் சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம். ஒப்பு கொண்டது மட்டுமல்ல, இந்த ஆட்சியிலே ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

சட்டரீதியாக சந்தித்து எதிர்த்தே தீருவோம் என்று, அனுமதிக்க மாட்டோம் என்று அப்போதும் உறுதி சொல்லப்பட்டது.

அதிமுக பொதுக்குழுவிலும், நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வில் இருந்து  இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அதிமுக அரசு மத்திய அரசை கேட்டு கொள்கிறது என்றும் அறிவித்தார்கள்.

இவ்வளவையும் சொல்லிவிட்டு அதனை எதிர்க்கக்கூடிய ஆற்றலும், துணிவும் இல்லை. தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்பட்டதே தவிர, அதை தடுக்கக்கூடிய வழியில் இப்போது இருக்கக்கூடிய ஆட்சி ஈடுபட்டு இருக்கிறதா? என்றால் இல்லை.

13 மாணவர்கள் தற்கொலை கொண்டு மாண்டு போய் இருக்கிறார்கள்.   விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி உதயமானவுடன், இந்த நீட் தேர்வை சட்டப்படி ரத்து செய்யப்படக்கூடிய வேலையில்  நாங்கள் முழுமையாக ஈடுபடுவோம். அதில் நாங்கள் வெற்றி காண்போம்.இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு, கடந்த 15ம் தேதி சட்டமன்றத்திலே எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து ஏகமனதாக ஒரு தீர்மானம், மசோதாவை நிறைவேற்றியிருந்தோம். 7. 5 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனை வரவேற்று நாங்கள் பேசியிருக்கிறோம். சட்டமன்றத்தில் பதிவாகியிருக்கிறது.

அதன் பிறகு அந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 40 நாட்கள் ஆகியிருக்கிறது.

இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. இதில் காலம் தாழ்த்தவேண்டிய அவசியம் இல்லை.

இதை எடப்பாடி கேட்க மாட்டார். ஆனால், இந்த ஸ்டாலின் கேட்பான் அது தான் உறுதி.

திமுக கேட்கும். நீட் தேர்வு முடிவு வந்து விட்டது.

இன்னும் சில நாட்களில் கவுன்சிலிங்கை நடத்தி ஆக வேண்டும். கவர்னர் அனுமதி அளித்தால் தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.   இதற்காக திமுக சார்பில் நான் கவர்னருக்கு கடிதம் எழுதினேன்.

எனக்கு ஒரு பதில் கடிதம் ஆளுநர் அனுப்பியிருக்கிறார்.

என்னை மதித்து அனுப்பியிருக்கிறார். அதில் தமிழக மாணவர்களின் கண்ணீரை துடைக்கிறோம் என்று சொல்லப்பட்டிருக்கிறதா?.

இல்லை. நீதி வழங்குகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறாரா? இல்லை.

அதில் பரிசீலித்து சட்டரீதியாக முடிவு செய்ய 3 அல்லது 4 வாரம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார். ஏற்கனவே 40 நாட்கள் போயிருக்கிறதே அதுவே நீண்ட காலம்.

இந்த மசோதா நிறைவேறி நடைமுறைக்க வந்தால் தான் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேர் மருத்துவ மாணவர்களாக ஆகும் வாய்ப்பு கிடைக்கும். இல்லை என்றால் 8 பேர் தான் மருத்துவர்களாக ஆக முடியும்.

இது எவ்வளவு பெரிய அநீதி. நம்கண்முன் நடக்கும் அநீதியை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதா? நம்மால் சும்மா இருக்க முடியுமா? தாமதம் செய்தால், அதிமுக அரசு கைவிட்டு விடும் என்று கவர்னர் நினைத்து கொண்டிருக்கிறாரா? அதிமுக அப்படி இருக்கலாம்.

திமுக அப்படியிருக்காது. நாங்கள் விட மாட்டோம்.

ஆளுநரை ஒப்புதல் செய்ய வேண்டிய அளவுக்கு என்னென்ன வழிமுறை இருக்கிறதோ? அந்த வழிவகைகளை திமுக நிச்சயம் எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர்  டி. ஆர். பாலு, முதன்மை செயலாளர் கே. என். நேரு, துணை பொது செயலாளர் பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, செய்தி தொடர்பாளர் டி. ேக. எஸ். இளங்கோவன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் மா. சுப்பிரமணியன், பி. கே. சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு, தா. மோ. அன்பரசன், ஆவடி நாசர், எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர்,அரவிந்த் ரமேஷ், ஆர். டி. சேகர், தாயகம் கவி, ரவிச்சந்திரன், எழிலரசன், கிருஷ்ணசாமி, வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜா அன்பழகன், பிரபாகர் ராஜா   உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


.

மூலக்கதை