வீட்டு வேலைக்கு காவலரை பயன்படுத்திய ஊர்க்காவல் படை தளபதி ‘டிஸ்மிஸ்’ : உத்தரபிரதேச அரசு நடவடிக்கை

தினகரன்  தினகரன்
வீட்டு வேலைக்கு காவலரை பயன்படுத்திய ஊர்க்காவல் படை தளபதி ‘டிஸ்மிஸ்’ : உத்தரபிரதேச அரசு நடவடிக்கை

லக்னோ, :வீட்டு வேலைக்கு காவலரை பயன்படுத்திய விவகாரத்தில் ‘ஹோம்கார்டு’ மாவட்ட அதிகாரியை உத்தரபிரதேச அரசு ‘டிஸ்மிஸ்’ செய்து உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்ட ஊர்க்காவல் படை தளபதி கிருபா சங்கர் பாண்டே மீது கடந்தாண்டு நிதிமோசடி உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. மேலும், அவர் தனது வீட்டு வேலைக்கு ஊர்க்காவல் படையை சேர்ந்த தன்னார்வ காவலர்களை கட்டாய பணியில் அமர்த்தி வேலை வாங்கியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. மாநில உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அரசு ஒதுக்கும் நிதியில் முறைகேடு செய்தது, வீட்டு வேலைக்கு தன்னார்வ காவலர்களை பணியில் அமர்த்தியது உள்ளிட்டவை உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவரை அம்மாநில அரசு டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில முதல்வர் அலுவலகம் (சிஎம்ஓ) வெளியிட்ட அறிவிப்பில், ‘லக்னோ மாவட்ட ஊர்க்காவல் படை தளபதி (கமாண்டன்ட்) கிருபா சங்கர் பாண்டேவை அவரது பதவியில் இருந்து  நீக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அவர் மீது நிதி முறைகேடுகள்,  மோசடி மற்றும் வீட்டுப் பணிக்கு தன்னார்வ காவலர்களை பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அவர், தனது கடமையை செய்வதில் விதிமீறல்களை செய்துள்ளார். முன்னதாக நடந்த விசாரணையின் போது, ​​சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து 6 முறை விளக்கம் கோரப்பட்டது. ஆனால், அவரிடமிருந்து திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், தற்போது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை