லடாக்கில் இந்தியா - சீனா இடையிலான பதற்றம் அதிகரிக்கக்கூடாது: அமெரிக்கா

தினமலர்  தினமலர்
லடாக்கில் இந்தியா  சீனா இடையிலான பதற்றம் அதிகரிக்கக்கூடாது: அமெரிக்கா

வாஷிங்டன்: லடாக்கில், இந்தியா - சீனா இடையிலான பதற்றம் அதிகரிக்காமல் பார்த்து கொள்வதை உறுதி செய்ய விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் டில்லி வந்து, நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின் போது, பிராந்திய ஒத்துழைப்பு, பாதுகாப்பு தகவல் பரிமாற்றம், ஆயுத வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது : தெற்கு ஆசியாவில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிப்பதையும், தென் சீன கடலில், இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தையும் அமெரிக்கா வரவேற்கிறது. இமயமலை முதல் தென் சீன கடல் பகுதிகள் வரை சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்க ஒத்த எண்ணங்களை கொண்ட நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மலபார் கடற்பயிற்சியில் ஆஸ்திரேலியா இணைவது குறித்த இந்தியாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.


இமயமலைப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போதுள்ள பிரச்னை பெரிதாகாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். ராணுவ பயிற்சி, தகவல் பரிமாற்றம், தளவாடங்கள் விற்பனை என இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். சமீப நாட்களாக இந்தியாவுடன் ராணுவ உறவு சிறப்பானதாக இருந்து வருகிறது. இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பானது 2016 முதல் வளர்ந்து வருவதுடன் தற்போது முக்கியமானதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை