ஐபிஎல் டி20 லீக்: 10 விக்கெட் வித்தியாசத்தில்மும்பை அபார வெற்றி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20 லீக்: 10 விக்கெட் வித்தியாசத்தில்மும்பை அபார வெற்றி

ஷார்ஜா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக சவுரவ் திவாரி சேர்க்கப்பட்ட நிலையில், போலார்டு தலைமை பொறுப்பேற்றார். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது. சென்னை அணியில் வாட்சன், சாவ்லா, கேதார் நீக்கப்பட்டு, ருதுராஜ், ஜெகதீசன், தாஹிர் இடம் பெற்றனர். ருதுராஜ், டு பிளெஸ்ஸி இருவரும் சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். 5 பந்துகளை சந்தித்த ருதுராஜ் டக் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த ராயுடு 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். டு பிளெஸ்ஸி 1 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் டி காக் வசம் பிடிபட, சென்னை அணி 1.5 ஓவரில் 3 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து விழி பிதுங்கியது. பூம்ரா வேகத்தில் ஜெகதீசன் கோல்டன் டக் அவுட்டாகி நடையை கட்ட, சிஎஸ்கே நிலை 3 ரன்னுக்கு 4 விக்கெட் என மேலும் பரிதாபமாகியது. இந்த நிலையில், கேப்டன் தோனி - ஜடேஜா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. ஜடேஜா 7 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் குருணல் வசம் பிடிபட்டார். தோனி 16 பந்தில் 16 ரன் எடுத்து (2 பவுண்டரி, 1 சிக்சர்) ராகுல் சாஹர் சுழலில் விக்கெட் கீப்பர் டி காக் வசம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, சிஎஸ்கே 6.4 ஓவரில் 30 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திக்கு தெரியாத காட்டில் திகைத்து நின்றது.தீபக் சாஹர் தன் பங்குக்கு ஒரு முட்டையை போட்டு வெளியேற, சிஎஸ்கே நிலைமை 43/7 என்றாகி அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. எனினும், சாம் கரன் - ஷர்துல் தாகூர் ஜோடி நம்பிக்கையுடன் போராடி கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 8வது விக்கெட்டுக்கு 28 ரன் சேர்த்து கவுரவம் காத்தனர். ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தாவுக்கு எதிராக ஆர்சிபி அணி 49 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. கரன் தயவில் சென்னை அணி ஒரு வழியாக அதைத் தாண்டியது. தாகூர் 11 ரன் எடுத்து கோல்டர் நைல் வேகத்தில் வெளியேறினார். சாம் கரன் - இம்ரான் தாஹிர் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தனர். போல்ட் வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய கரன் 52 ரன் எடுத்து (47 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி பந்தில் விக்கெட்டை பற்றிகொடுத்தார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்தது. தாஹிர் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.மும்பை பந்துவீச்சில் போல்ட் 4, பூம்ரா, ராகுல் தலா 2, கோல்டர் நைல் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 115 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. இதில், டி காக் அதிரடியாக விளையாடி 46 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்ஸர்), இசான் கிஷன் 68 ரன் ( 37 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்ஸ்சர் என அதிரடியாக விளையாடி அசத்தினர். இருவரும் சேர்ந்து நின்று விளையாடி ரன்களை குவித்து மிக எளிதாக வெற்றி இலக்கை எட்டினர். இறுதியில், விக்கெட் இழப்பு எதுவும் இன்றி, 116 ரன்களை குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.

மூலக்கதை