வாழ்வா? சாவா? ஆட்டமாகவே நினைத்து விளையாடினேன்...விஜய் ஷங்கர் உற்சாகம்

தினகரன்  தினகரன்
வாழ்வா? சாவா? ஆட்டமாகவே நினைத்து விளையாடினேன்...விஜய் ஷங்கர் உற்சாகம்

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியை வாழ்வா? சாவா? ஆட்டமாகவே நினைத்து விளையாடினேன் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் கூறியுள்ளார். துபாயில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில்,  டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீச... ராஜஸ்தான்  20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. சஞ்சு சாம்சன் 36, பென் ஸ்டோக்ஸ் 30 ரன் எடுத்தனர். ஐதராபாத் சார்பில் ஹோல்டர் 3, விஜய் ஷங்கர், ரஷித் கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீரர்கள் வார்னர் 4 ரன், பேர்ஸ்டோ 10 ரன்னில் வெளியேறிய நிலையில், மணிஷ் பாண்டே - விஜய் ஷங்கர் ஜோடி 140 ரன் சேர்த்து வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பாண்டே 83 ரன் (47 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), ஷங்கர் 52 ரன்னுடன் (51 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாண்டே ஆட்ட நாயகன் விருது பெற்றார். அதிரடியாக விளையாடிய பாண்டே சிக்சர் மழை பொழிந்த நிலையில், ஆர்ச்சர் வீசிய 16வது ஓவரில் ஷங்கர் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார். மற்றபடி சிறப்பாக பந்து வீசிய ஆர்ச்சர் 4 ஓவரில் 21ரன் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியதுடன் அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி மிரட்டியது குறிப்பிடத்தக்கது.    நீண்ட இடைவெளிக்குப்  பிறகு அரை சதம் அடித்த விஜய் ஷங்கர் கூறுகையில், ‘இந்த போட்டியை வாழ்வா? சாவா? ஆட்டமாகவே நினைத்து விளையாடினேன். அந்த அளவுக்கு எனக்கு நெருக்கடி இருந்தது. அதை சமாளித்து அரைசதம் அடித்தது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. எனது பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன். எதிர்முனையில் ஆடிய பாண்டேவுக்கு நெருக்கடி இல்லாமல் பார்த்துக் கொண்டேன்’ என்றார்.சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ‘டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த என் முடிவு குறித்து கேள்வி எழுந்தது. சமீபத்திய 2  ஆட்டங்களின் முடிவு அடிப்படையிலேயே பந்துவீச்சை தேர்வு செய்தேன். இங்கு வானிலை குளிர்ச்சியாக இருக்கிறது. பனி வேறு. என் முடிவுக்கு இவையும் ஒரு காரணம். ஜேசன் ஹோல்டர் எங்கள் வில்லின் கூடுதல் நாணாக சேர்ந்துள்ளார். அற்புதமாகப் பந்து வீசினார். அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் ஒரு தேர்ந்த  ஆல் ரவுண்டர். அதேபோல் எங்கள் அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்கள் அற்புத காட்சியை நிகழ்த்திக் காட்டினர்’ என்றார். ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட மனீஷ் பாண்டே, ‘நடுவரிசை ஆட்டக்காரர்கள் செய்ய வேண்டியது குறித்து நிறைய விவாதிக்கப்பட்டது. விவிஎஸ் லட்சுமணன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவுடன் பேசினேன். எனது வழக்கமான பாணியில் விளையாடினேன். இறுதி ஓவருக்கு முன்பாகவே போட்டியை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்’ என்றார். ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ‘நாங்கள் நன்றாகதான் தொடங்கினோம் என்று நினைக்கிறேன். ஆர்ச்சர் ஆரம்பத்தில் பெரிய விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால், அதன்பிறகு எங்களால் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியவில்லை. அதற்கு பனியும் ஒரு காரணம்’ என்று  கூறியுள்ளார்.

மூலக்கதை