தேறாத சென்னை அணி ‘சரண்டர்’: மும்பையிடம் மோசமான தோல்வி | அக்டோபர் 23, 2020

தினமலர்  தினமலர்
தேறாத சென்னை அணி ‘சரண்டர்’: மும்பையிடம் மோசமான தோல்வி | அக்டோபர் 23, 2020

சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண்டர் ஆனது. இதனால் சென்னையின் ‘பிளே–ஆப்’ வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.

 

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின.

 

ரோகித் காயம்: இடது பக்க தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, இப்போட்டியில் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக கேப்டனாக போலார்டு, மாற்று வீரராக சவுரப் திவாரி களமிறங்கினர்.

 

தாகிர் தேர்வு: சென்னை அணியில் வாட்சன், கேதர் ஜாதவ், பியுஸ் சாவ்லா நீக்கப்பட்டு இம்ரான் தாகிர், ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் போலார்டு, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

விக்கெட் சரிவு: சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டுபிளசி துவக்கம் தந்தனர். பவுல்ட் ‘மெய்டனாக’ வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் கெய்க்வாட் ‘டக்–அவுட்’ ஆனார். பும்ரா வீசிய 2வது ஓவரில் அம்பதி ராயுடு (2), தமிழக வீரர் ஜெகதீசன் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். மூன்றாவது ஓவரை வீசிய பவுல்ட், இம்முறை டுபிளசியை (1) வெளியேற்றினார். சென்னை அணி 3 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

 

தோனி ஏமாற்றம்: பின், கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா இணைந்து விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்க போராடினர். பும்ரா வீசிய 4வது ஓவரில் தோனி 2, ஜடேஜா ஒரு பவுண்டரி அடிக்க, 13 ரன் கிடைத்தது. தொடர்ந்து அசத்திய பவுல்ட் ‘வேகத்தில்’ ஜடேஜா (7) ‘பெவிலியன்’ திரும்பினார். ராகுல் சகார் வீசிய 7வது ஓவரின் 3வது பந்தில் சிக்சர் அடித்த தோனி (16), அடுத்த பந்தில் அவுட்டானார்.

 

சாம் ஆறுதல்: ராகுல் சகார் ‘சுழலில்’ தீபக் சகார் (0) சிக்கினார். பொறுப்பாக ஆடிய சாம் கர்ரான், ராகுல் சகார், கூல்டர்–நைல் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். ஷர்துல் தாகூர் (11) நிலைக்கவில்லை. பவுல்ட் வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டரி அடித்து அரைசதம் கடந்த சாம் கர்ரான் (52), கடைசி பந்தில் போல்டானார்.

சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்தது. இம்ரான் தாகிர் (13) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை அணி சார்பில் பவுல்ட் 4 விக்கெட் கைப்பற்றினார்.

 

 

மும்பை அணி 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிஷான் (68 ரன், 5 சிக்சர், 6 பவுண்டரி), குயின்டன் (46 ரன், 2 சிக்சர், 5 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மும்பைக்கு எதிராக களமிறங்கிய சென்னை அணி, ‘டுவென்டி–20’ அரங்கில் தனது 200வது போட்டியில் விளையாடியது. ஐ.பி.எல்., தொடரில் 176 போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணி, சாம்பியன்ஸ் லீக் தொடரில் 24 போட்டிகளில் விளையாடி உள்ளது.

 

மும்பை அணியின் டிரண்ட் பவுல்ட், 4 ஓவரில் 18 ரன் வழங்கி 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன் 2015ல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இவர் 19 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்திருந்தார்.

 

‘பிக் பாஷ் லீக்’ வாய்ப்பு

ஆஸ்திரேலியாவில், ‘பிக் பாஷ் லீக்’ (‘டுவென்டி–20’) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சீசனில், ஒவ்வொரு அணியிலும் 3 வெளிநாட்டு வீரர்களை சேர்த்துக் கொள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்தியாவின் தோனி, ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பி.சி.சி.ஐ., அனுமதி வழங்குமா எனத் தெரியவில்லை.

 

மும்பையிடம் ஏமாற்றிய சென்னை அணி, ஐ.பி.எல்., வரலாற்றில் முதன்முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றது. இதற்கு முன், 2008ல் வான்கடேயில் நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.

 

சரியான பதிலடி

அபுதாபியில் நடந்த இந்த சீசனில் முதல் லீக் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இதற்கு மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

மூலக்கதை