அமெரிக்க தேர்தல் முடிவை மாற்றும் ஆற்றல் கொண்ட ரஷ்ய ஹேக்கர்கள்; உளவுத்துறை பகீர் தகவல்

தினமலர்  தினமலர்
அமெரிக்க தேர்தல் முடிவை மாற்றும் ஆற்றல் கொண்ட ரஷ்ய ஹேக்கர்கள்; உளவுத்துறை பகீர் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்க உளவு நிறுவனம் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி ரஷ்யாவைச் சேர்ந்த ஹேக்கர் குரூப் அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருந்து அரசு தகவல்களை கணினி வழியாக திருடுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க மாகாணங்களில் அரசு ரகசியங்களை திருட இவர்கள் ரஷ்ய அரசு உதவியோடு செயல்பட்டு வருகின்றனர் என கூறியுள்ளது. காலாகாலமாக ரஷ்யா அமெரிக்காவை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக இன்றளவும் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் முல்லர் கமிஷன் இது குறித்து அப்போது ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் தேர்தல் சமயத்தில் முக்கிய அரசு ஆவணங்களை கணினி வழியாக ரஷ்ய ஹேக்கர்கள் திருடி ரஷ்ய அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக கூறப்படுகிறது.

பொருளாதாரத்தில் வளர்ந்த வல்லரசு நாடான அமெரிக்காவில் இன்னும் மின்னணு வாக்குப்பதிவு முறை இல்லை. தேர்தல் முறைகேடுகளை தவிர்க்க பழைய வாக்கு செலுத்தும் முறையை பின்பற்றி வருகிறது. அமெரிக்கா இவ்வாறு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்கூட சமயத்தில் ரஷ்யா அவ்வப்போது தங்கள் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் அமெரிக்காவை உளவு பார்க்கிறது.

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் அரசு சார்ந்த நடவடிக்கைகளை நோட்டமிட விளாடிமிர் புடின் அரசே சட்டவிரோதமாக ஹேக்கிங் நிறுவனங்களை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது. ஓட்டுப்பெட்டிகளில் வாக்குகள் பதிவிடப்பட்ட பின்னர் கணினி உதவியுடன்தான் அவை எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது கணினி தகவல்களை முன்னுக்கு பின்னாக ரஷ்ய ஹேக்கர்கள் மாற்ற முயற்சி மேற்கொள்வர்.

இதனால் நூலிழையில் சில மாகாணங்களில் சில வேட்பாளர்கள் தோற்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அனைத்து மாகாணங்களிலும் இணையவழி வாக்குகள் மாற்றம் நடந்தால் ஆட்சியே மாறவும் வாய்ப்புள்ளது. இதன் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள், அமெரிக்காவில் இருந்து யார் இவர்களை இயக்குகிறார்கள் என எந்த தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இன்னும் ஒரு வார காலத்தில் தேர்தல் வர இருப்பதால் இதுகுறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை