ராகுல் இன்று பீகாரில் பிரசாரம் தொடங்கும் நிலையில் காங். தலைமை அலுவலகத்தில் ரெய்டு : காரில் இருந்து ரூ.9 லட்சம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
ராகுல் இன்று பீகாரில் பிரசாரம் தொடங்கும் நிலையில் காங். தலைமை அலுவலகத்தில் ரெய்டு : காரில் இருந்து ரூ.9 லட்சம் பறிமுதல்

பாட்னா, :ராகுல்காந்தி இன்று பீகாரில் பிரசாரம் தொடங்கும் நிலையில், வருமான வரித்துறை சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் காரில் இருந்து ₹9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.பீகார் பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிராசரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி, மாநில முதல்வர் நிதிஷ்குமாருடன் இணைந்து இன்று பிரசாரம் ேமற்கொள்கிறார். அதேபோல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் இன்று, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இந்நிலையில் பாட்னாவில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சதகத் ஆசிரமத்தில் நேற்றிரவு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது கட்சி அலுவலக வளாகத்தில் இருந்த ஒரு காரில், சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘காரில் கைப்பற்றப்பட்ட பணமானது, காங்கிரஸ் தலைவர் அசுதோஷ்குமார் சிங் மூலம் வேட்பாளர் மோகன் வஸ்தவாவுக்குக் கொடுக்க கட்சி தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை சார்பில் மாநில காங்கிரஸ் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதிக்குள் மீட்கப்பட்ட பணம் விவகாரம் தொடர்பாக அவர்கள் தங்களது கருத்துகளை ெதளிவுபடுத்த வேண்டும். மேலும், பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் சக்தி சிங் கோஹில் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களிடமும், இந்த பணம் கைப்பற்றப்பட்டது குறித்து இரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் சக்தி சிங் கோஹில் கூறுகையில், ‘கட்சியன் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை. இதில் அரசியல் சதி உள்ளது. ஆளும் தரப்பு தோல்விக்கு பயந்து இதுபோன்ற வேலைகளை செய்கிறது. கட்சி தலைமையகத்துக்கு பலரது வாகனங்கள் வந்து செல்கின்றன. யாருடைய காரில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது.வருமான வரித்துறை வேண்டுமென்றே இதுபோன்ற சோதனைகளையெல்லாம் நடத்துகிறது. எங்களுக்கு எந்த பயமும் இல்லை. வளாகத்திற்கு வெளியே மீட்கப்பட்ட பணம் குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், கட்சியின் தலைமையக வளாகத்திற்குள் வருமான வரித்துறை பணம் எதுவும் கைப்பற்றவில்லை’ என்றார்.

மூலக்கதை