இதே கேள்வியை ஜோ பிடேனிடம் கேட்பீர்களா? - அமெரிக்க ஊடகத்திடம் கொந்தளித்த டிரம்ப்

தினமலர்  தினமலர்
இதே கேள்வியை ஜோ பிடேனிடம் கேட்பீர்களா?  அமெரிக்க ஊடகத்திடம் கொந்தளித்த டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அங்கு ஜனநாயக கட்சியும் குடியரசுக் கட்சியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்க மீடியாக்கள் பல ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே பலமுறை குற்றம்சாட்டி வந்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் ஒரு பிரபல அமெரிக்க தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி சேனல் சிபிஎஸ். இந்த சேனலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 60 நிமிடங்கள் தேர்தல் குறித்து பிரபல அமெரிக்க பத்திரிக்கையாளர் லேஸ்லே ஸ்டாலிடம் பேட்டி அளித்துள்ளார். இந்த தொலைக்காட்சி பேட்டியில் டிரம்ப் கேமரா முன்னர் அமர்த்தப்பட்டு அவரிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கு அவர் பதிலளித்து வருகிறார். ‛இதேபோன்று கடினமான கேள்விகளை ஜனநாயகக்கட்சி இடம் கேளுங்கள். ஜோ பிடேனிடம் கேளுங்கள்' என ஆவேசமாகக் கூறுகிறார். இந்த சில வினாடி வீடியோ டிவிட்டரில் வெளியாகியது.


இது இந்தப் பேட்டியை பரபரப்பாகியுள்ளது. இந்த வார இறுதியில் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த பேட்டிக்கு இதுவே ஒரு விளம்பரமாக அமைந்து உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கோபம் அடையச்செய்யும் பல சவாலான கேள்விகளை ஸ்டால் இந்த பேட்டியில் கேட்டுள்ளார் என நெட்டிசன்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் டிரம்ப். தனது பேஸ்புக் பக்க லிங் ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்த அவர் ‛அமெரிக்க ஊடகங்களின் நேர்மையின்மை, வெறுப்புணர்வு, முரட்டுத்தனம், நடுநிலைமை ஆகியவற்றை இந்த பேட்டி காட்டுகிறது' என அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ லிங்கில் சிபிஎஸ் பேட்டியின் 38 நிமிட வீடியோ உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை