கொல்கத்தாவை சிதைத்த சிராஜ்

தினகரன்  தினகரன்
கொல்கத்தாவை சிதைத்த சிராஜ்

அபுதாபி: ஐபிஎல் தொடர்களில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்களை வீசி மெகா சாதனை படைத்த முகமது சிராஜ்,  தனது பந்து வீச்சு மூலம்  கொல்கத்தா பேட்டிங் வரிசையை  சிதைத்தார். அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் களம் கண்டது. பெங்களூர் வீரர்களின் துல்லிய தாக்குதலை சமாளிக்க முடியாமல் அந்த அணி 20ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 84ரன் மட்டுமே எடுத்தது. கேப்டன் மோர்கன் மட்டுமே அதிகபட்சமாக 30ரன்  எடுத்தார். அடுத்து விளையாடிய பெங்களூர் 13.3 ஓவரில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 85ரன் எடுத்தது. கூடவே 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றிக்கு பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர்கள்தான் காரணம். கிறிஸ் மோரிஸ் விக்கெட் எடுக்காவிட்டாலும் 4ஓவர்களில் ஒரு மெய்டன் வீசி 16ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதேபோல் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் ஒரு மெய்டன் வீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். கூடவே 14ரன் தந்தார். யஜ்வேந்திர சாஹல் 4ஓவர் வீசி 15ரன்களை தந்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.  ஒரு விக்கெட் எடுத்த நவ்தீப் சைனி, ஒரு ஓவரை மட்டுமே வீசிய உடானா என அனைவரும் சிறப்பாகவே பந்து வீசினர். அதிலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 4 ஓவர்களில் 2 ஓவர்களை மெய்டன் ஓவர்களாக வீசினார். கூடவே  அந்த மெய்டன் ஓவர்களில் 3 விக்கெட்களையும் கைப்பற்றி கொல்கத்தாவை பேட்டிங் வரிசையை சிதைத்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில்  வீரர் ஒருவர் 2 மெய்டன் ஓவர்களை வீசியது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமல்ல  அடுத்தடுத்த ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்களை வீழ்த்தியதும் இதுவே முதல் முறை. மேலும் ஒரே போட்டியில் 4 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டதும் இதுதான் முதல் தடவை.இப்படி மெகா சாதனை புரிந்த முகமது சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டிக்கு பிறகு சிராஜ், ‘நன்றாக விளையாடியதற்கு நான் முதலில் அல்லாவுக்கு நன்றி  தெரிவிக்கிறேன். அப்புறம் புதுப்பந்தில் எனக்கு ஓவர் வீச வாய்ப்பளித்த  விராத் கோஹ்லிக்கு நன்றி. புதுப்பந்தில்   மூலம் நிறைய பயிற்சி எடுத்திருக்கிறேன். ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பந்து வீச வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால்  ஆரம்பத்திலேயே சகோதரர் விராத், ‘அய்யா தயாராக இருங்கள்’ என்று சொல்லியிருந்தார்.  நிதிஷ் ரானாவுக்கு மிகச்சரியாக பந்து வீசினேன். நான் என்ன திட்டமிட்டேனோ, அதை சரியாக செய்து முடித்தேன்’ என்று கூறியுள்ளார்.பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, ‘ புதுப்பந்தை வீச கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைதான் பயன்படுத்த திட்டமிட்டிருந்தேன். டாஸ் தோற்றதில் மகிழ்ச்சிதான். அதனால் தான் நாங்கள் முதலில் ஆட வேண்டிய சூழல் ஏற்படவில்லை. அதன்பிறகுதான் மோரிசையும், சிராஜையும் பந்து வீச வைத்தேன். எங்கள் திட்டங்களை அமல் படுத்தினோம். மோரிஸ் மிகத் திறமையாக செயல்பட்டார். கடந்த ஆண்டு கடும் விமர்சனத்திற்கு சிராஜ் ஆளானார். இந்த முறை கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டார். இப்போது அதன் பலன்களை பார்த்திருக்கிறார்’ என்றார்.

மூலக்கதை