43 பிணைக் கைதிகள் மீட்பு

தினமலர்  தினமலர்
43 பிணைக் கைதிகள் மீட்பு

43 பிணைக் கைதிகள் மீட்பு

திபிலிசி: யுரேசிய நாடான ஜார்ஜியாவின் ஹுக்திதி மாவட்டத்தில் உள்ள வங்கிக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய நபர், வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வங்கியில் சிக்கியிருந்த, 43 பேரை, பாதுகாப்பாக மீட்டனர். எனினும், அந்த ஆயுதம் ஏந்திய நபர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

ஜகர்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், நேற்று கன மழை பெய்தது. அப்போது, அங்கிருந்த, 20 மீட்டர் ஆழ நிலக்கரி சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு பணியாற்றிய சுரங்க தொழிலாளர்கள், 11 பேர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர், உயிரிழந்தோரின் உடல்களை மீட்டனர்.

நாடு திரும்பும் அமெரிக்க வீரர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில், நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், “வெளிநாடுகளில், கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்த போர்களில், ஏராளமான அமெரிக்க வீரர்கள், தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். ஆப்கானிஸ்தானில், கடந்த, 19 ஆண்டுகளாக இருந்து வரும் நம் வீரர்கள், நாடு திரும்ப உள்ளனர்,” என்றார்.

வழக்கறிஞர்களுக்கு அறிவுரை

துபாய்: மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், 'மைனர்'களாக இருந்தபோது போராட்டங்களில் ஈடுபட்டோருக்கு, இப்போது மரண தண்டனை விதிக்கக்கோரி, சவுதி வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றங்களை செய்யும், 'மைனர்'களுக்கு மரண தண்டனை வழங்க, சவுதி அரசு, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து விட்டதை, வழக்கறிஞர்களுக்கு, சவுதி மனித உரிமைகள் ஆணையம் நேற்று சுட்டிக்காட்டியது.

இந்திய நீதிபதியிடம் கூகுள் வழக்கு

நியூயார்க்: அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தின் மாவட்ட நீதிமன்றத்தில், கடந்த, 20ம் தேதி, கூகுள் நிறுவனத்திற்கு எதிராக, நீதித் துறை அமைச்சகம், ஒரு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதி அமித் மேத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த, 2014 முதல், இங்கு நீதிபதியாக பணியாற்றி வரும் அமித் மேத்தா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.


மூலக்கதை