நம்பிக்கை தந்த கோஹ்லி: முகமது சிராஜ் பெருமிதம் | அக்டோபர் 22, 2020

தினமலர்  தினமலர்
நம்பிக்கை தந்த கோஹ்லி: முகமது சிராஜ் பெருமிதம் | அக்டோபர் 22, 2020

அபுதாபி: ‘‘கேப்டன் விராத் கோஹ்லி புதிய பந்தை என்னிடம் தந்தது நம்பிக்கையை அதிகரித்தது,’’ என, முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி (85/2, 13.3 ஓவர்) 8 விக்கெட் வித்தியாசத்தில் கோல்கட்டா அணியை (84/8, 20 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியில் வேகத்தில் அசத்திய பெங்களூரு அணியின் முகமது சிராஜ், 4 ஓவரில், 8 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். இதில் 2 ‘மெய்டன் ஓவர்’ அடங்கும். இதன்மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் ஒரு போட்டியில் 2 ‘மெய்டன்’ வீசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

 

இதுகுறித்து முகமது சிராஜ் கூறியது: வழக்கமாக 10 ஓவர்களுக்கு பின் தான் பந்துவீச அழைக்கப்படுவேன். ஆனால் இப்போட்டியில் புதிய பந்தை வீசும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இதற்காக எவ்வித திட்டமும் செயல்படுத்தவில்லை. முதல் ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசிய பின், விக்கெட் கீப்பர் டிவிலியர்சிடம் ஆலோசித்த கேப்டன் கோஹ்லி, என்னிடம் வந்து ‘சார் ரெடியா இருக்கீங்களா?, நீங்கள் தான் அடுத்து பந்துவீசப் போகிறீர்கள்,’ என்றார். இது எனக்குள் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

நான் இயல்பாகவே ‘இன்சுவிங்’ முறையில் பந்துவீசுவேன். ஆனால் பயிற்சியின் போது ’அவுட்சுவிங்’ முறையில் பந்துவீசுவதில் கூடுதல் கவனம் செலுத்தினேன். வலைப்பயிற்சியில் தேவ்தத் படிக்கல், பார்த்திவ் படேல் ஆகியோருக்கு பவுலிங் செய்தேன். இதேபோல போட்டியில் ‘அவுட்சுவிங்’ வீசியதால் விக்கெட் வீழ்த்த முடிந்தது.

இவ்வாறு சிராஜ் கூறினார்.

 

கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘‘முகமது சிராஜை பந்துவீச அழைத்தது தாமதமான முடிவு. முதலில் மோரிஸ், வாஷிங்டன் சுந்தரை பந்துவீச திட்டமிட்டிருந்தோம். அதன்பின்பு தான் மோரிஸ், சிராஜ் பந்துவீச முடிவு செய்தோம். ‘டாஸ்’ இழந்தது மகிழ்ச்சி. ஏனெனில் ஒருவேளை நாங்கள் ‘டாஸ்’ வென்றிருந்தால் முதலில் ‘பேட்டிங்’ செய்ய திட்டமிட்டுருந்தோம்,’’ என்றார்.

மூலக்கதை