இந்தியா–ஆஸி., தொடருக்கு அனுமதி: சிட்னியில் முதல் மோதல் | அக்டோபர் 22, 2020

தினமலர்  தினமலர்
இந்தியா–ஆஸி., தொடருக்கு அனுமதி: சிட்னியில் முதல் மோதல் | அக்டோபர் 22, 2020

சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளை சிட்னி, கான்பெராவில் நடத்திக் கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி, 3 ஒருநாள், 3 சர்வதேச ‘டுவென்டி–20’, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் முதலில் பிரிஸ்பேன் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் குயீன்ஸ்லாந்து மாநில அரசு, தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்களில், இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளை சிட்னி, கான்பெராவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அனுமதி வழங்கியது. இதனால் ஐ.பி.எல்., தொடரில் விளையாடி வரும் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் சிட்னியில் தனிமைப்படுத்திக் கொண்டு, பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

உத்தேச அட்டவணைப்படி முதலிரண்டு ஒருநாள் போட்டிகள் வரும் நவ. 27, 29ல் சிட்னியில் நடக்கும். அதன்பின் 3வது ஒருநாள் (டிச. 1), முதல் ‘டுவென்டி–20’ (டிச. 4) கான்பெராவில் நடத்தப்படும். மீதமுள்ள ‘டுவென்டி–20’ போட்டிகள் டிச. 6, 8ல் சிட்னியில் நடக்கும்.

இதனை தொடர்ந்து அடிலெய்டில், டிச. 17–21ல் முதல் டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடத்தப்படும். மீதமுள்ள போட்டிகள் மெல்போர்ன் (டிச. 26–30), சிட்னி (2021, ஜன. 7–11), பிரிஸ்பேனில் (ஜன. 15–19) நடத்தப்படும். இதற்கு பி.சி.சி.ஐ., சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்படும்.

மூலக்கதை