நாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: நாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. ஊழியர்களின் முந்தைய ஆண்டு செயல்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. இந்த போனஸ் ஆண்டுதோறும் துர்கா பூஜை மற்றும் தசராவுக்கு முன்னர் வழங்கப்பட்டு விடும். ஆனால் கொரோனாவால் பொது முடக்கத்தையும், பெரும் பொருளாதார வீழ்ச்சியையும் நாடு சந்தித்து வரும் இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இது மத்திய அரசு ஊழியர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.எனவே போனசை முன்வைத்து ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்து இருந்தனர். அதாவது 21-ம் தேதிக்குள் போனஸ் அறிவிக்காவிட்டால், 22-ம் தேதி நாடு முழுவதும் 2 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்யப்படும் என அனைத்திந்திய ரெயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. இந்த சூழலில் நாடு முழுவதும் உள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூ.17,951 வரை போனஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை