மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது : துர்கா பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

தினகரன்  தினகரன்
மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது : துர்கா பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

கொல்கத்தா : மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த துர்கா பூஜை நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சக்தியின் அடையாளமாக துர்கா கடவுள் வணங்கப்படுவதாக குறிப்பிட்டார். நாட்டின் 26 கோடி மகளிருக்கு வங்கிக்கணக்கு தொடக்கம், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் அளித்தல், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் அவர்களுக்கு கற்பிப்போம் திட்டம் தொடக்கம், பேறுகால விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக அதிகரித்தது உள்ளிட்ட மகளிருக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்தார். பாலியல் வன்கொடுமையை ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டது குறித்தும் அவர் நினைவுக் கூர்ந்தார். ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ராமகிருஷ்ண பரமஹம்சா, சுவாமி விவேகானந்தா, ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்து சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளாகவும் ஆன்மீக தலைவர்களாகவும், சுதந்திர போராட்டத் தியாகிகளாகவும் திகழ்ந்தனர் என்று பிரதமர் புகழ்ந்துரைத்தார்.பிரதமரின் இந்த உரையை தொலைக்காட்சி மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளில் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒளிபரப்ப செய்ய பாஜக ஏற்பாடு செய்திருந்தது.   

மூலக்கதை