இந்தியா எங்களுக்கு பலன் தரும் கூட்டணி: அமெரிக்க அமைச்சர் மார்க் எஸ்பர் கருத்து

தினமலர்  தினமலர்
இந்தியா எங்களுக்கு பலன் தரும் கூட்டணி: அமெரிக்க அமைச்சர் மார்க் எஸ்பர் கருத்து

எர்ரி: 'இந்த நுாற்றாண்டில் இந்தோ -- பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு நன்மை தரக்கூடிய கூட்டாளியாக இந்தியா திகழும்' என அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் தெரிவித்தார்.

இந்தியா - அமெரிக்காவின் ராணுவம் மற்றும் வெளியுறுவுத் துறை அமைச்சர்கள் சந்தித்து பேசும் '2 ப்ளஸ் 2' கூட்டம் கடந்த 2018 முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டம் அடுத்த வாரம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் டில்லி வருகின்றனர். கூட்டம் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் கூறியதாவது:


உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. அனைத்து துறைகளிலும் திறன் வாய்ந்ததாகவும் திறமை மிகுந்த மக்களையும் கொண்டுள்ளது. ஆனாலும் லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்புகளை அவர்கள் தினம்தோறும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையிலான மூன்றாவது 2 ப்ளஸ் 2 கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இது மிகவும் முக்கியமான சந்திப்பாக கருதப்படுகிறது. இந்த நுாற்றாண்டில் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு நன்மை தரக்கூடிய கூட்டாளியாக இந்தியா திகழும். இவ்வாறு கூறினார்.

இந்தியாவுக்கு செனட்டர்கள் வரவேற்பு


இந்திய பெருங்கடலில், இந்திய - அமெரிக்க கடற்படைக்கு இடையிலான, இருதரப்பு பயிற்சி, 1992ல் துவங்கியது. இது, மலபார் பயிற்சி என்றழைக்கப்படுகிறது. இந்த பயிற்சியில், 2015 முதல், ஜப்பான் நிரந்தர உறுப்பினரானது. கடந்த சில ஆண்டுகளாக, ஆஸ்திரேலியா இந்த பயிற்சியில் பங்கேற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ராணுவம் மற்றும் பாதுகாப்பு உறவுகள், கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, மலபார் பயிற்சியில் பங்கேற்க, ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. அதை ஆஸ்திரேலியாவும் ஏற்றது. இந்தியாவின் இந்த முடிவுக்கு, அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த, செனட்டர்கள் பலர், வரவேற்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.

மூலக்கதை