அதிருப்தி: ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் விவசாயிகள்...கலெக்டர் உத்தரவை கண்டு கொள்ளாத அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
அதிருப்தி: ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் விவசாயிகள்...கலெக்டர் உத்தரவை கண்டு கொள்ளாத அதிகாரிகள்

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர் உத்தரவிட்டு பல மாதங்களாகியும் பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

ரிஷிவந்தியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 175 ஏக்கர் பரப்பிலான பெரிய ஏரி உள்ளது. மழைக் காலங்களில், இந்த பெரிய ஏரி நிரம்பினால், பாசன கால்வாய் வழியாக அருகில் உள்ள வெங்கலம், முட்டியம் கிராம ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இதன் மூலம் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விளைநில கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கும்.

ரிஷிவந்தியத்தில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாமல் இருக்கும்.ரிஷிவந்தியம் வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் பெரிய ஏரிக்கு வரும் வகையில் வரத்து கால்வாய் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், ஏரி தண்ணீரின்றி வறண்டது. இதை சாதகமாகப் பயன்படுத்திய சிலர், ஏரிப்பகுதியை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து பயிர் செய்தனர்.இது குறித்து தகவலறிந்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், சிலர் ஏரியில் கிணறு வெட்டி, விவசாயம் செய்யத் துவங்கி விட்டனர். இதனால் பெரிய ஏரி ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கிறது.வனப்பகுதியில் இருந்து ஏரிக்கு தண்ணீர் செல்லும் வரத்து வாய்க்கால் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடப்பதால், சில தினங்களாக பெய்த மழை நீர் ஏரிக்குச் சென்றடையாமல் வாய்க்காலிலேயே தேங்கி நிற்கிறது. மேலும், ஏரியில் உள்ள மூன்று பாசன மதகுகளில், இரண்டு மதகுகள் பழுதடைந்துள்ளன.கடந்த 2015ம் ஆண்டு பெய்த பலத்த மழையால் ஏரி நிரம்பி, சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. ஆனால் மதகு வழியாக நீர் கசிந்து கொண்டே இருந்ததால், நீண்ட நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை.

மதகுகள் பழுதடைந்தது மற்றும் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.அதன்பேரில், கலெக்டர் கிரண் குராலா, சில மாதங்களுக்கு முன் ரிஷிவந்தியம் பெரிய ஏரியை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதனையொட்டி, ஏரியை ஆக்கிரமித்து பயிர் செய்தவர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையினை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எடுக்கவில்லை.

இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், ரிஷிவந்தியம் பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், புதர்மண்டி கிடக்கும் நீர்வரத்து வாய்க்காலினை சரிசெய்து, பாசன மதகுகளை சீரமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை