முடிவு! இ.சி.ஆர்., குறுக்கே மழைநீர் தேங்குவதை தடுக்க.... தரைபாலத்துடன் கூடிய வடிகால் அமைக்க

தினமலர்  தினமலர்
முடிவு! இ.சி.ஆர்., குறுக்கே மழைநீர் தேங்குவதை தடுக்க.... தரைபாலத்துடன் கூடிய வடிகால் அமைக்க

நீலாங்கரை : நீலாங்கரை பகுதியில், மழைநீர் தேங்குவதை தடுக்க, கிழக்கு கடற்கரை சாலையின் குறுக்கே, ஐந்து இடங்களில், 'ரெடிமேட் பாக்ஸ்' வடிகால் அமைக்கப்படுகிறது.

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையின், கிழக்கு திசையில் கடற்கரை, மேற்கு திசையில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளது. கிழக்கு திசையின், முக்கிய குடியிருப்பு பகுதியான, நீலாங்கரை, கோவிந்தன் நகர், பாண்டியன் சாலை, ஏ.ஜி.எஸ்., காலனி, களத்துமேட்டு தெரு மற்றும் பல்கலை தெருவில் வடியும் மழைநீர், பக்கிங்ஹாம் கால்வாயில் செல்ல வேண்டும். நில பரப்பில், நீரோட்ட பாதை இல்லாததால், மழை நீர், கிழக்கு கடற்கரை சாலையில் தேங்கியது. இதனால், வாகன போக்குவரத்து தடைபட்டதுடன், தேங்கிய நீரை, மின்மோட்டார் கொண்டு அகற்ற வேண்டி இருந்தது.

வெள்ள பாதிப்பை தடுக்க, கிழக்கு கடற்கரை சாலையின் குறுக்கே, தரைப்பாலத்துடன் கூடிய வடிகால் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.தற்போதைய சாலை அகலத்தை கணக்கிட்டு, 60 அடி நீளம், 5 அடி ஆழம், 5 அடி அகலத்தில், ஐந்து இடங்களில், வடிகால் அமைக்கும் பணி, ஜனவரியில் துவங்கியது.இரண்டு இடங்களில், பணி முடிந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பணி, கடந்த மாதம் மீண்டும் துவங்கியது. போக்குவரத்து அதிகமுள்ள பகுதியானதால், 'ரெடிமேட் பாக்ஸ்' வடிவில் கால்வாய் அமைக்கப்படுகிறது.

மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு மின்வடங்கள் செல்லும் பகுதியில் மட்டும், கம்பி கட்டி, சிமென்ட் கலவையால் வடிகால் கட்டமைக்கப்படுகிறது. பணி, இரவில் நடக்கிறது. பள்ளம் தோண்டிய இடத்தை மூடாமல், பள்ளத்தில் இரும்பு துாண்கள் அமைத்து, ஒரு அங்குலம் தடிமம் கொண்ட இரும்பு தகரம், சாலை மட்டத்தில் போடப்படுகிறது.கனரக வாகனங்கள் ஏறினாலும், பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், இரவில் இரும்பு தகரத்தை திறந்து, பணி செய்த பின், காலையில் மூடப்படும்.இதனால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பணி நடக்கிறது. இம்மாத இறுதிக்குள், அனைத்து பணிகளையும் முடிக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மூலக்கதை