'பதுக்க' வேண்டாம்! பெரிய வெங்காயத்தை குடோனில்... பறிமுதல் செய்யப்படுமென எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
பதுக்க வேண்டாம்! பெரிய வெங்காயத்தை குடோனில்... பறிமுதல் செய்யப்படுமென எச்சரிக்கை

திருப்பூர் : தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பதுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பறிமுதல் செய்வோம் என, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், சின்ன வெங்காயத்தை மறந்துவிட்டன. மகாராஷ்டிராவில் இருந்து வரும் பெரிய வெங்காயத்தை மட்டுமே ஓட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது.சில்லறை வியாபாரிகளும், பெரிய வெங்காய மூட்டைகளை வாங்கி, 100 ரூபாய்க்கு மூன்று கிலோ, நான்கு கிலோ, ஐந்து கிலோ என்று ரகம் பிரித்து விற்றனர். கடந்த, 15 நாட்களாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் வெங்காய வரத்து தடைபட்டதால், திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம், தற்போது, 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

திடீரென வெங்காய விலை கடுமையாக உயர்ந்ததால், நடுத்தர குடும்பத்தினர் திகைத்து போயுள்ளனர். லோடு வருவது குறைந்துள்ள நிலையில், மொத்த வியாபாரிகள், பெரிய வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.குறிப்பாக, தென்னம்பாளையம், ஏ.பி.டி., ரோடு பகுதிகளில் உள்ள, குடோன்களில், வெங்காய மூட்டைகள் பதுக்கப்பட்டு உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, வருவாய்த்துறை அதிகாரிகள், தொடர் ஆய்வு நடத்தி, பெரிய வெங்காயம் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் கூறுகையில், ''வெங்காய வரத்து குறைந்துள்ளதால், பசுமை பண்ணை மூலமாக, குறைந்த விலைக்கு விற்க அரசு உத்தரவிட்டுள்ளது. வெங்காயம் பதுக்கி வைப்பதாக புகார் எழுந்துள்ளதால், தாலுகா வாரியாக ஆய்வு நடத்தி, பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டதால், பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.வருகிறது... எகிப்து வெங்காயம்வெங்காய வியாபாரிகள் சிலர் கூறியதாவது:திருப்பூருக்கு, 20 டன் லாரிகளில், தினமும், 15 லோடு வெங்காயம் வந்து கொண்டிருந்தது.

தற்போது, ஐந்து லோடு கூட வருவதில்லை. வரத்து குறைந்ததால், தட்டுப்பாடு தலை துாக்கியுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சென்னை வந்துள்ள எகிப்து வெங்காயம், விரைவில் திருப்பூர் வந்தடையும். ஓரிரு நாட்களில் வெங்காயம் விலை மளமளவென குறையும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை