ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டம் நிபந்தனை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

தினமலர்  தினமலர்
ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டம் நிபந்தனை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை :'நிலமற்ற ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் நிலத்தை விற்பனை செய்ய வேண்டுமானால், அதை மீண்டும் அரசிற்கு விற்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக நிபந்தனை விதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பரமக்குடியைச் சேர்ந்த, வலையனேந்தல் அருள் தாக்கல் செய்த மனு:வலையனேந்தலில் எனக்கு, 2 சென்ட் நிலத்திற்கு, 1996ல் தமிழக அரசு வீட்டுமனை பட்டா வழங்கியது. வீடு கட்டி வசிக்கிறேன்.அதே இடத்திற்கு, 20 ஆண்டுகளுக்குப் பின் வேறொருவர் பெயருக்கு பட்டா வழங்க, 2016ல் பரமக்குடி சிறப்பு தாசில்தார் உத்தரவிட்டார்.இது சட்டவிரோதம். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அருள் குறிப்பிட்டார்.


ரத்தாகிவிடும்


நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.அரசுத் தரப்பு, 'மனுதாரருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், வீடு கட்டாமல் இருந்தால், அதற்குரிய பட்டா தானாக ரத்தாகிவிடும்.'மனுதாரருக்கு, 2016ல் வேறு பிளாட்டிற்கு பட்டா ஒதுக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டு தவறானது' என தெரிவித்தது.மனுதாரர் தரப்பு, 'முதலில் ஒதுக்கிய இடத்தில், மனுதாரர் வீடுகட்டி வசிக்கிறார். அதற்கு போட்டோ ஆதாரம் உள்ளது. 2016ல் வேறு பிளாட்டிற்கு வழங்கிய பட்டாவை விட்டுக் கொடுக்க தயார்' என தெரிவித்தது.

நீதிபதி உத்தரவு:
இதில் தற்போதைய நிலையின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அங்கு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதை அரசுத் தரப்பில் உறுதி செய்ய வேண்டும்.நிலமற்ற ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் நிலத்தை விற்பனை செய்ய ேண்டுமானால், அந்நிலத்தை மீண்டும் அரசிடமே விற்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக நிபந்தனை விதிக்க வேண்டும்.

உரிமை கோரக்கூடாது



அதை, அரசு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் வாங்கி, விண்ணப்பித்து, காத்திருக்கும் பிற நிலமற்ற ஏழைகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வழங்கலாம்.ஏற்கனவே வாங்கிய இலவச நிலத்தை, விருப்பத்திற்கேற்ப விற்பனை செய்துவிட்டு, வேறு இடத்தில் நிலமற்ற ஏழைக்குரிய நிலம் வழங்க வேண்டும் என உரிமை கோரக்கூடாது. விசாரணை நவ., 18க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை