ஜெ., நினைவிடம் திறக்கும் வி.ஐ.பி., யார்?

தினமலர்  தினமலர்
ஜெ., நினைவிடம் திறக்கும் வி.ஐ.பி., யார்?

சென்னை : ஜெயலலிதா நினைவிடத்தை, நவம்பர் இறுதியில் திறக்கும் வகையில், தமிழக அரசு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. டில்லி வி.ஐ.பி., ஒருவரை வைத்து, நினைவு
மண்டபத்தை திறக்க, திட்டமிடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினாவில், 58 கோடி ரூபாய் மதிப்பில், நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஜெ., உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடம் கட்டப்படுகிறது.சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் வடிவமைத்து கொடுத்த தொழில்நுட்பத்தின்படி, இந்த கட்டடம் முழுதும், கான்கிரீட் கலவையை பயன்படுத்தி, கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, கட்டுமான சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.

தற்போது, கான்கிரீட் போடப்பட்ட கட்டடத்தில் இருந்து, சென்ட்ரிங் கம்பிகளை பிரித்து எடுக்கும் பணி துவங்கியுள்ளது.ஒரு வாரத்தில் இப்பணிகள் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நினைவிடத்தை, நவம்பர் இறுதியில் திறக்க, முதல்வர் இ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில் பங்கேற்க வரும்படி, டில்லியில் உள்ள முக்கிய பிரமுகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.அதற்கேற்ப, சென்ட்ரிங் பிரிப்பு பணிகள் முடிந்ததும், நினைவிடத்தின் உட்புற அலங்காரம் உள்ளிட்ட பணிகளை வேகப்படுத்த, பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.மூலக்கதை