பா.ஜ., மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே ராஜினாமா; தேசியவாத காங்.,கில் இணைகிறார்

தினமலர்  தினமலர்
பா.ஜ., மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே ராஜினாமா; தேசியவாத காங்.,கில் இணைகிறார்

மும்பை: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 'இந்த முடிவுக்கு, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தான் காரணம்' என, அவர் குற்றம் சாட்டினார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா -- காங்., -- தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில பா.ஜ.,வில், கடந்த, 35 ஆண்டுகளாக, பல்வேறு பதவிகள் வகித்து வந்தவர், ஏக்நாத் கட்சே. கடந்த, பா.ஜ., ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்து வந்த ஏக்நாத் மீது, 2016ல், ஊழல் புகார் எழுந்தது.

இதையடுத்து, அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு, அப்போதைய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டார். இதையடுத்து, பட்னவிஸ் மீது, ஏக்நாத் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில், பா.ஜ., அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, ஏக்நாத் கட்சே நேற்று(அக்.,21) ராஜினாமா செய்தார்.

கட்சி தலைமை மீது, தனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்றும், இந்த முடிவுக்கு, தேவேந்திர பட்னவிஸ் தான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, தேசியவாத காங்.,கில், ஏக்நாத் கட்சே, நாளை இணைய இருப்பதாக, அக்கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், நேற்று அறிவித்தார்.

மூலக்கதை