காயத்தால் விலகினார் டுவைன் பிராவோ

தினகரன்  தினகரன்
காயத்தால் விலகினார் டுவைன் பிராவோ

நடப்பு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ காயம் காரணமாக விலகியுள்ளார். தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகினர். இப்போது தொடர் தோல்விகளால் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியுள்ள நிலையில், சிஎஸ்கே மிகவும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக  டுவைன் பிராவோ முதலில் சில போட்டிகளில் விளையாடவில்லை. டெல்லிக்கு எதிரான போட்டியின்போது தொடையில் காயம் ஏற்பட்டது. அதனால் அவதிப்பட்ட பிராவோ தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனை உறுதி செய்த சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், ‘தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக  பிராவோ தொடரில் இருந்து விலகுகிறார். அடுத்த சில நாட்களில் நாடு திரும்ப உள்ளார். சென்னை அணியில் ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் முக்கியமான வீரர்கள் இல்லை என்று கூறவில்லை. ஆனால் அவர்களின் தனிப்பட்ட விவகாரங்களையும் மதிக்க வேண்டும். அணியில் மூத்த வீரர், இளைய வீரர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்கக்கூடாது’ என்று கூறியுள்ளார். கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும்  பிராவோ விலகியுள்ளது சென்னை அணிக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதில் இதுவரை வாய்ப்பு கிடைக்காத இம்ரான் தாஹிர் (தெ. ஆப்ரிக்கா) நாளை களமிறக்கப்படலாம். அவர் கடந்த சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் இதுவரை ஆடாத நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

மூலக்கதை