அக்.31ல் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடக்கம் 1000வது வெற்றிக்காக களம் காணும் நடால்

தினகரன்  தினகரன்
அக்.31ல் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடக்கம் 1000வது வெற்றிக்காக களம் காணும் நடால்

பாரிஸ்: ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் ஒற்றையர் ஆட்டங்களில் 1000வது வெற்றி என்ற சாதனை மைல்கல்லை குறிவைத்து ரோலக்ஸ் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளார். பிரான்ஸ் டென்னிஸ் சங்கம் நடத்தும் ரோலக்ஸ் பாரிஸ் மாஸ்டர்ஸ் -2020 தொடர் அக்.31ம் தேதி தொடங்குகிறது. நவ. 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் பங்கேற்க ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் ஒப்புதல் அளித்துள்ளார். உலகின் 2ம் நிலை வீரரான நடால்  இதுவரை 999 ஒற்றையர் ஆட்டங்களில் வென்றுள்ளார். இந்த தொடரில் பங்கேற்று 1000வது வெற்றியை ஈட்ட அவர் முடிவு செய்துள்ளார். அதன் மூலம் 1000 ஒற்றையர் ஆட்டங்களில் வென்றுள்ள சுவீட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரின் சாதனையை நடால் எட்ட முடியும். பெடரர் இதுவரை 1513 ஆட்டங்களில் விளையாடி 1242 வெற்றிகளை குவித்துள்ளார். நடால் இதுவரை 1200 ஆட்டங்களில் ஆடியுள்ளார். உலகின் முதல் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 1119 ஆட்டங்களில் விளையாடி 930 வெற்றிகளை பெற்றுள்ளார். ஆனால், வெற்றி சதவீதத்தில் நடால் (83.25%) முன்னிலை வகிக்கிறார். ஜோகோவிச் (83.10%), பெடரர் (82.10%) அடுத்த இடங்களில் உள்ளனர். ஏற்கனவே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர் பெடரர். பாரிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வென்றதின் மூலம் அந்த சாதனையை நடால் சமன் செய்தார். இருவரும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். அதே நேரத்தில் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் பெடரர் 31 முறையும், நடால் 28 முறையும் விளையாடி இருக்கின்றனர். நடால் தனது 34வது வயதிலும், பெடரர் தனது 36வது வயதிலும் 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை