4 ஆண்டு கால நீண்ட பயணத்திற்கு பின் சூரியனை சுற்றும் விண்கல்லில் இருந்து மாதிரியை சேகரித்தது நாசா விண்கலம்

தினகரன்  தினகரன்
4 ஆண்டு கால நீண்ட பயணத்திற்கு பின் சூரியனை சுற்றும் விண்கல்லில் இருந்து மாதிரியை சேகரித்தது நாசா விண்கலம்

வாஷிங்டன்: நான்கு ஆண்டு கால பயணத்திற்கு பின், சூரிய குடும்பத்தை சுற்றி வரும் பெனு விண்கல்லில் இருந்து நாசா அனுப்பிய ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம், வெற்றிகரமாக மாதிரிகளை சேகரிக்க தொடங்கியது. சூரிய குடும்பத்தை சுற்றி வரும் பெனு விண்கல், நேரியல் கணக்கீட்டின் மூலம், 1999 செப்டம்பர் 11ம் தேதி அப்பலோ குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட கார்பன் விண்கல்லாகும். இது, பூமியில் இருந்து 32.1 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரெக்ஸ்’ எனப்படும் விண்கலத்தை புளோரிடாவில் உள்ள கேப் கார்னிவல் ஏவுதளத்தில் இருந்து கடந்த 2016 செப்டம்பர் 8ம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம், 2018 டிசம்பர் 3ம் தேதி பெனு விண்கல்லின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. அதன் பிறகு, படிப்படியாக அதன் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டு நேற்று பெனு விண்கல்லில் இருந்து பாறைத் துகள்களை வெற்றிகரமாக தொட்டுள்ளது. அங்கிருந்து பாறைகளை ஆய்வுக்காக பூமிக்கு எடுத்துவர இருப்பதால் இத்திட்டத்துக்கு, ‘டச் அண்ட் கோ’ (தொட்டு விட்டு செல்) என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் உள்ள எந்திரக் கரங்கள் பெனு விண்கல்லை துளையிட்டு பாறைத் துகள்களை எடுக்கத் தொடங்கி உள்ளது. இதே போல், தூசித் துகள்களையும் அது சேகரித்து வருகிறது. இதன் மூலம், குறைந்தபட்சம் 60 கிராம் அளவிற்கு பாறைத் துகள்களை ஆய்வுக்கு எடுத்து வர திட்டமிட்டுள்ளது. எந்தளவு துகள்களை விண்கலம் சேகரித்துள்ளது என்பது சனிக்கிழமைதான் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், கூடுதல் மாதிரிகளை எடுத்து வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.* 2023ல் தான் பூமி திரும்பும்பெனுவில் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் அடுத்தாண்டு மார்ச் 21ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு, 2023ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பூமியை வந்தடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.* சூரிய வரலாறை அறியலாம்பெனு விண்கல்லில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள பாறை, துகள் மாதிரிகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சூரிய குடும்பத்தின் வரலாறு, தோற்றம் குறித்து அறிவதற்கு பெரிதும் உதவக் கூடும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

மூலக்கதை