சர்வதேச பருவநிலை விருது 3 இந்திய மாணவர்கள் தேர்வு

தினமலர்  தினமலர்
சர்வதேச பருவநிலை விருது 3 இந்திய மாணவர்கள் தேர்வு

ஸ்டாக்ஹோம்:சர்வதேச பருவநிலை விருதுக்கான இறுதி போட்டிக்கு, மூன்று இந்திய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் உள்ள குழந்தைகளுக்கான பருவநிலை அறக்கட்டளை, ஒவ்வொரு ஆண்டும், குழந்தைகளுக்கு, 'சர்வதேச பருவநிலை விருது' வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு, விருதுக்காக, 24 நாடுகளை சேர்ந்த, 70 பரிந்துரைகள் வந்தன. இதில், ஏழு பேர் இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இதில், மூன்று பேர் இந்தியர்கள் ஆவர்.

மும்பையைச் சேர்ந்த ஆதாய் ஜோஷி, 17, எர்ணாகுளத்தைச் சேர்ந்த துருவ் சஞ்சய், 13, மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர், 13, தேர்வாகி உள்ளனர்.இதில், வினிஷா, நிலக்கரி இன்றி இஸ்திரி போடும் தள்ளுவண்டியை உருவாக்கியுள்ளார். வண்டியின் மேற்கூரையில், 'சோலார் பேனல்'கள் பொருத்தப்பட்டு, அதன் வாயிலாக, இஸ்திரி பெட்டியை சூடு செய்யும் வகையில், அது உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆதாய் ஜோஷி, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை மீட்டெடுக்க, 'தி ரைட் கிரீன்' என்ற அமைப்பை துவங்கினார். மாணவர் துருவ் சஞ்சய், சோலார் பேனலை வைத்து அடுப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.வரும் நவம்பர், 2ம் தேதி, தேர்வு செய்யப்பட்டுள்ள ஏழு பேரில் இருந்து, இரண்டு வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ளன.

அவர்களுக்கு, 8.40 லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன், 'டிப்ளோமா' சான்றிதழும், பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளது.கடந்த வருடம், டில்லியைச் சேர்ந்த சகோதரர்கள் நவ் மற்றும் விஹான் அகர்வால், இந்த விருது பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை