டார்ஜிலிங் தனி மாநில கோரிக்கை நிறைேவற்ற மறுப்பு: பாஜ கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்

தினகரன்  தினகரன்
டார்ஜிலிங் தனி மாநில கோரிக்கை நிறைேவற்ற மறுப்பு: பாஜ கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்

கொல்கத்தா: பாஜ அரசால் ஏமாற்றப்பட்டதால் தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சிதலைவர் பிமல்  குருங் அறிவித்துள்ளார். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சமீப காலமாக, ஒவ்வொரு கட்சியாக வெளியேறி  வருகின்றன. இந்தாண்டு தொடக்கத்தில் அதன் நீண்ட கால கூட்டணி கட்சியான சிவசேனா விலகியது. சமீபத்தில், சர்ச்சைக்குரிய வேளாண்  சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோன்மணி அகாலி தளம் விலகியது. இதைத் தொடர்ந்து, பீகார் சட்டப்பேரவை தேரதல் தொகுதி பங்கீட்டில்  ஏற்பட்ட மோதலால் ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் விலகியது. இந்நிலையில், இக்கூட்டணியில் இருந்து விலகுவதாக கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவும் நேற்று அறிவித்தது. டார்ஜிலிங்கைத் தனி மாநிலமாக  அறிவிக்க வேண்டும் என்று கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி போராடி வருகிறது. இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தேசிய ஜனநாயகக்  கூட்டணியிலும் பங்கு பெற்று வருகிறது. ஆனால், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாததை கண்டித்து, கூட்டணியில் இருந்து விலகுவதாக  இக்கட்சியின் தலைவர் பிமல் குருங் அறிவித்துள்ளார்.இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘கடந்த 2009ம் ஆண்டு முதல் தேஜ கூட்டணியில் உள்ளோம். ஆனால், டார்ஜிலிங் தனி மாநிலம் குறித்த  எந்த உத்தரவாதத்தையும் பாஜ அரசு எங்களுக்கு வழங்கவில்லை. இது, கூர்க்கா இனமக்கள் மற்றும் பழங்குடிகளின் பிரச்னை மட்டுமே அல்ல. நாங்கள்  ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்கிறோம். எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். 2021 மேற்கு வங்க தேர்தலில்  மம்தாவை ஆதரிப்போம்,’’ என்றார்.

மூலக்கதை