டிரம்பா, ஜோ பிடனா: ஹிந்துக்கள் விவாதம்

தினமலர்  தினமலர்
டிரம்பா, ஜோ பிடனா: ஹிந்துக்கள் விவாதம்

ஹூஸ்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் அல்லது ஜோ பிடனுக்கு ஓட்டளிப்பது தொடர்பாக, அமெரிக்க வாழ் ஹிந்துக்கள் இடையே கடும் விவாதம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர், டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இதற்கு முன் நடந்த தேர்தல்களை விட, இந்தத் தேர்தலில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இழுபறி நிலை உள்ள மாகாணங்களில், வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக, இந்தியர்களின் ஓட்டு உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்க வாழ் ஹிந்துக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக, இரண்டு கட்சிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில், ஒரு சதவீதமே இருந்தாலும், நான்காவது பெரிய மதமாக ஹிந்து மதம் உள்ளது. அதனால், ஹிந்து மதத்தைச் சேர்ந்த, 20 லட்சம் பேரில் ஓட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.இரண்டு கட்சிகளின் சார்பிலும், ஹிந்து மக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கான பிரசாரம் ஏற்கனவே நடந்து வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்க வாழ் ஹிந்துக்கள் அறக்கட்டளை உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சார்பில், சமீபத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் கருத்தரங்கம் நடந்தது. இதில் பங்கேற்றவர்களில் சிலர் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தனர்; வேறு சிலர், பிடனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.இரண்டு தரப்பினரும் தங்களுடைய தரப்பை முன்வைத்து கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். ஹிந்துக்கள் இவ்வாறு பிரிந்து இருப்பதால், இரண்டு பேரில் யாருக்கு ஹிந்துக்கள் ஓட்டு கிடைக்கும் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விசாரணைக்கு டிரம்ப் உத்தரவு:கமலாவுக்கு வாழ்த்துஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர், கமலா ஹாரிசின், 56வது பிறந்த நாளையொட்டி, ஜோ பிடன் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.'அடுத்த ஆண்டு பிறந்த நாளை, வெள்ளை மாளிகையில், ஐஸ்கிரீமுடன் கொண்டாடுவோம்' என, தன் வாழ்த்து செய்தியில் பிடன் கூறியுள்ளார்.'அனைவரும் தேர்தலில் கண்டிப்பாக ஓட்டளிக்க வேண்டும் என்பதே என்னுடைய பிறந்த நாள் விருப்பம்' என, கமலா ஹாரிஸ், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிலர், தமிழகத்தில் உள்ள கமலா ஹாரிசின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், 56 பேர்களை அழைத்து, கமலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற ஏற்பாடு செய்துள்ளனர்.

மூலக்கதை